திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முன்விரோத காரணமாக குடிப்போதையில் தகராறு செய்த விவசாயத் தொழிலாளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி அடுத்த மேலத்திருப்பாலக்குடி பிரதானசாலையை சேர்ந்தவர் நடராஜன் மகன் சக்கரவர்த்தி (40). இவரது வயலில் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக அதே பகுதியை சேர்ந்த எம்ஜிஆர் காலணி வடிவேல் மகன் சுவேந்திரன்(35) தொழிலாளியாக வேலைப் பார்த்து வந்துள்ளார். சுவேந்திரனின் நடவடிக்கைகள் பிடிக்காமல் போனதால கடந்த ஆண்டு அவரை வேலையிலிருந்து சக்கரவர்த்தி நீக்கியுள்ளார்.
இதனால், இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததுடன், அவ்வப்போது சுவேந்திரன் மதுப்போதையில் சக்கரவார்த்தியிடம் தன்னை மீண்டும் வேலை சேர்ந்துக்கொள்ள கூறி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு மதுப்போதையில் சுவேந்திரன், சக்கரவர்த்தி வீட்டுக்கு வந்து அவரிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். அங்கிருந்து சென்ற சுவேந்திரன், கைப்பேசி மூலம் சக்கரவர்த்தியை தொடர்புகொண்டு தகாதவார்த்தைகள் பேசியதால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தி, அரிவாளை எடுத்துக்கொண்டு சுவேந்திரன் வீட்டுக்கு சென்று அவரை வெட்டியதில் பலத்த காயமடைந்த சுவேந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து, பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துரையினர் சுவேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தப்பியோடிய சக்கரவர்த்தியை கைது செய்து மேல்விசாரணை செய்கின்றனர்.