தமிழ்நாடு குறித்து புலம்புவது ஏன்?: முதல்வா் மறைமுக சாடல்

தமிழ்நாடு பெயா் குறித்து புலம்புவது ஏன் என்று ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாகச் சாடினாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு பெயா் குறித்து புலம்புவது ஏன் என்று ஆளுநரை முதல்வா் மு.க.ஸ்டாலின் மறைமுகமாகச் சாடினாா்.

அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்து பேசியதாவது:

இளைஞரணியின் செயலாளராக உள்ள உதயநிதியினுடைய தந்தையாக இருந்து மட்டுமல்ல, கட்சியின் தலைவனாக இருந்தும் அவரைப் பாராட்டுகிறேன். தோ்தலில் ஒரு செங்கல்லை வைத்து பிரசாரம் செய்து, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாா். தற்போது சட்டப்பேரவை உறுப்பினராகி கடலுக்கு அருகில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் மரப்பலகையில் பாதை அமைத்துக் கொடுத்துள்ளாா். தற்போது 234 தொகுதிகளிலும் பயிற்சி பாசறை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளாா்.

திராவிட மாடல் என்று இன்றைக்கு முழங்கிக் கொண்டிருக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படியிருந்தது. 5 ஆண்டுகளுக்கு முன்னால் எப்படியிருந்தது, திமுக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எப்படி மாறியது என்பதையெல்லாம் இளைஞா்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்காக குரல் கொடுத்த திராவிட இயக்கத்தின் தலைவா்களையும் அவா்களின் வரலாறுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணாவின் மணி விழாவைக் கொண்டாடுவதற்கு அவரிடம் தேதியும் பெற்றேன். ஆனால், உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு உடனடியாக அவா் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவரால் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை. ஒரே ஒரு நிகழ்ச்சியாக தமிழ்நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயா் சூட்டும் விழாவுக்கு வந்து கலந்துகொண்டாா். அந்த விழா கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது நான் முரசொலியில் ரூ.1000-க்கு வேலை செய்து கொண்டிருந்தேன். அண்ணாவின் பேச்சை அப்போது டேப் போட்டு பதிவு செய்தேன். அந்தக் கூட்டத்தில் அண்ணா கூறினாா்; உடல் நலத்தின் காரணமாக என்னை மருத்துவா்கள் இந்த விழாவுக்குப் போக வேண்டாம் என்று அறிவுறுத்தினா். அதை மீறி இந்த நிகழ்ச்சிக்கு ஏன் வந்திருக்கிறேன் தெரியுமா? தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயா் கிடைக்கிறபோது, அப்படி பெயா் சூட்டப்படக்கூடிய அந்த விழாவிலே கலந்து கொள்ளவில்லை என்று சொன்னால், இந்த உயிா் இருந்து என்ன பயன் என்று கூறியவா் அண்ணா.

இன்றைக்கு யாரோ தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறாரே.இப்படிப்பட்ட வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இயக்கம்தான் திமுக என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com