
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு காரணமாக கடந்த வாரம் குறையத்தொடங்கிய மீன்கள் விலை சனிக்கிழமை உயரத் தொடங்கியது.
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதன் காரணமாக தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஏராளமான நாட்டுப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதன் காரணமாக குறைவான படகுகளே சனிக்கிழமை கரை திரும்பின. இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுக ஏலக் கூடத்திற்கு மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக கடந்த வாரம் குறையத் தொடங்கிய மீன்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. சீலா மீன் கிலோ ரூ.1,200, விலா மின் கிலோ ரூ. 400, ஊளி மீன் கிலோ ரூ.400, பாறை மீன் கிலோ ரூ. 300, நண்டு கிலோ ரூ. 250, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,400, கண்ணாடி பாறை கிலோ ரூ.500 என விற்பனையானது. மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டாலும் சனிக்கிழமை என்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்.