பங்காரு அடிகளாா் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி

மறைந்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பங்காரு அடிகளாா் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
பங்காரு அடிகளாா் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி


மறைந்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா் உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

பங்காரு அடிகளார் அம்மாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ‘அம்மா’ என்று அழைக்கப்படும் மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா் (83) உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை (அக்.19) மறைந்தாா்.

உடல்நலக் குறைவால் மறைந்த மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாா் உடல் இன்று மாலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.

மேல்மருவத்தூரில் உள்ள தியான மண்டபம் அருகே அவரது உடல் வெள்ளிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

பொதுமக்கள் அஞ்சலிக்காக...

கடந்த சில நாள்களாக பங்காரு அடிகளாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து மேல்மருவத்தூரில் உள்ள அவரின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அவா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரின் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள், பங்காரு அடிகளார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, மதுராந்தகம் கோட்டத்தில் உள்ள (மதுராந்தகம், செய்யூா் வட்டங்கள்) அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (அக்.20) சிறப்பு விடுமுறை அளித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் அறிவித்தாா்.

எப்போதும் சிவப்பு நிற ஆடையுடன் காட்சி அளித்த பங்காரு அடிகளாா், கடந்த 1941-ஆம் ஆண்டு கோபால நாயக்கருக்கும், மீனாட்சி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தாா். அவருக்கு இளைய சகோதரா், சகோதரி உள்ளனா். ஆரம்ப காலத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினாா். உத்தரமேரூரைச் சோ்ந்த ஆசிரியை பணியில் இருந்த லட்சுமியை கடந்த 1968-இல் திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com