

தஞ்சாவூர்: பாஜக - அதிமுக பிரிவை நிரந்தரமாகப் பார்க்கிறேன் என்றும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நாம் தமிழர் கட்சி தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
பாஜக - அதிமுக கூட்டணியில் ஏற்பட்டுள்ளது விரிசல் அல்ல. அது, முறிவாகப் பார்க்கிறேன். அதை தற்காலிக பிரிவாக பார்க்கவில்லை. நிரந்தரப் பிரிவாகவே பார்க்கிறேன்.
மருத்துவப் படிப்பில் முதுநிலைப் படிப்புக்கு மட்டுமல்லாமல், எம்.பி.பி.எஸ். படிப்புக்கும் நீட் தேர்வை ஜீரோவாக ஆக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வி அடைந்துவிட்டது என்பது மத்திய அரசுக்கு தெரிந்துவிட்டது. நீட் தேர்வு தரமான மருத்துவரை உருவாக்காது என்றும், தரமான மருத்துவரை சாகடிக்கும் எனவும் தெரிந்த பிறகும் எதற்காக நீட் தேர்வு இருக்கிறது. எனவே, நீட் தேர்வை மொத்தமாகவே ஜீரோவாக ஆக்குவது நல்லது.
காங்கிரஸ் கட்சி இந்த நாட்டை மிக அதிகமாக 50 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது. அப்போது செய்யாத சாதிவாரி கணக்கெடுப்பை, தற்போது ஆட்சிக்கு வந்தால் செய்யப்போவதாக ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் நிலையில், அங்கு சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சி நடத்திக் காட்ட வேண்டும் என்றார்.
பின்னர் செய்தியாளரின் கேள்விக்குப் பதில் அளித்த சீமான், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்துதான் போட்டியிடுவோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.