ஆகஸ்டில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்!

இரண்டாம் கட்ட மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓட்டுநர் இல்லா  மெட்ரோ
ஓட்டுநர் இல்லா மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி ரயில் பெட்டிகளை, ஆகஸ்ட் மாதத்துக்குள் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து, அடுத்தடுத்த மாதங்களில் மேலும் சில ஆளில்லா மெட்ரோ ரயில்களை சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் தயாரிப்பு நிறுவனம் ஒப்படைக்கவுள்ளது. 2025-ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரவுள்ள கலங்கரை விளக்கம்(லைட் ஹவுஸ்) - பூந்தமல்லி இடையேயான வழித்தடத்தில் இந்த ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, முதல் கட்டத் திட்டப் பணிகள் முடிவடைந்து, விமானநிலையம்-விம்கோ நகா், பரங்கிமலை-சென்னை சென்ட்ரல் என இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்டமாக, மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரையிலான 3-ஆவது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரையிலான 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூா் வரையிலான 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் பாதைக்கான பணிகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் 3 பெட்டிகளை கொண்ட முதல் ஓட்டுநர் இல்லா தானியங்கி மெட்ரோ ரயில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாகவும், அடுத்த 2 மாதத்தில் 6 ரயில்கள் தயாரிக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அதற்குள் தானியங்கி மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்களில் தொழில்நுட்ப ரீதியிலான பணிகளை முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் இல்லா  மெட்ரோ
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: 7 பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை

4-ஆவது வழித்தடத்தில் கோடம்பாக்கத்தில் இருந்து பூந்தமல்லி இடையேயான முதல்கட்ட சேவையை 2025-ஆம் ஆண்டில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களை நிறுத்திவைக்க பூந்தமல்லியில் பணிமனை கட்டப்பட்டு வருகிறது.

தானியங்கி ரயில்கள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் மெட்ரோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1215.92 கோடி மதிப்பில் (வரிகள் உட்பட) வழங்கப்பட்டுள்ளது.

3 பெட்டிகளை கொண்ட அந்த ரயிலில் 1,000 பயணிகள் வரை பயணிக்க முடியும். மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்படும். முதல்கட்டத்தில் ரயில் இயக்குவது, நிறுத்துவது, ரயில் கதவை திறப்பது, மூடுவது எல்லாம் ஓட்டுநரால் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் இயக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏதாவது அவசர காலத்தில் உதவி தேவை என்றால், இயக்க கட்டுப்பாட்டு மைய ஊழியர் ரயில் செயல்பாட்டை கட்டுப்படுத்துவார். அடுத்த நிலையத்தை அடைந்த பிறகு, கட்டுப்பாட்டாளர் வசம் ஒப்படைக்கப்படும்.

2025-ஆம் ஆண்டில், இரண்டாம் கட்டத் திட்டத்தின் முதல் பகுதி பணிகள் நிறைவடையும்போது சுமார் 138 ரயில்கள் ஓடும் என்றும், அப்போது 19.2 லட்சம் மக்கள் தினசரி பயணம் மேற்கொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com