முக்கிய வேட்பாளர்கள் சந்திக்கும் பெயர்போன பிரச்னை!

முக்கிய வேட்பாளர்கள் பெயரில் போட்டியிடும் சுயேச்சைகள் பெரும் பிரச்னையாகவே உள்ளது.
முக்கிய வேட்பாளர்கள் சந்திக்கும் பெயர்போன பிரச்னை!

தேர்தல்.. இது ஒரு திருவிழா போலத்தான். வெறும் வாக்குகளைப் பெறுவது மட்டுமே வேட்பாளர்கள் சந்திக்கும் சவால் அல்ல. அதையும் தாண்டி ஏராளமான சவால்களை வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். அதில் பெயர் போன பிரச்னை ஒன்றும் உள்ளது.

தேர்தல் என்பது வெறும் எண்களைக்கொண்ட விளையாட்டல்ல. அது மிகப்பெரிய சவால் நிறைந்த போட்டி. இயற்கையாக இருக்கும் சவால்களை தாண்டி, செயற்கை சவால்களை சந்திப்பதில்தான் வேட்பாளர்கள் திணறுகிறார்கள். அதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர்களிலேயே சுயேச்சைகள் போட்டியிட்டு, வாக்காளர்களை குழப்புவது என்பது பல காலமாக நீடிக்கிறது.

முக்கிய வேட்பாளர்கள் சந்திக்கும் பெயர்போன பிரச்னை!
வெள்ளியங்கிரி மலைப்பாதையில் மருத்துவ முகாம் சாத்தியமா?

மாநிலத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் குறைந்தது 24 தொகுதிகளில் குறைந்தபட்சம் ஒரு சுயேச்சை வேட்பாளராவது முக்கிய கூட்டணிகளில் இருந்து போட்டியிடும் வேட்பாளரின் பெயரைக் கொண்டிருக்கிறார்.

அத்தகைய சுயேச்சை வேட்பாளர்கள் கணிசமான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற முடியாமல் ஆனாலும், சில வேளைகளில், முக்கிய கட்சி வேட்பாளரின் வாக்குகளை திசை திருப்புவதன் மூலம் வெற்றி-தோல்வி முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

2016 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் வி.சி.க. நிறுவனர் தொல் திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அதாவது இந்த தேர்தலில், திருமாவளவன் பெயரில் போட்டியிட்ட ஒரு சுயேச்சை வேட்பாளர் அப்போது 289 வாக்குகளைப் பெற்றிருந்தார். இதுவே தேர்தல் முடிவு மாறக் காரணமாகவும் அப்போது கருதப்பட்டது.

முக்கிய வேட்பாளர்கள் சந்திக்கும் பெயர்போன பிரச்னை!
போலி குறுந்தகவல்களை அடையாளம் காண்பது எப்படி? உதவுகிறது காவல்துறை

ஒரு சில நிகழ்வுகள்தான் ஏதேச்சையாக நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியுமே தவிர, அனைத்துமே அப்படித்தான் என கருதவே முடியாது. முக்கிய கட்சி வேட்பாளர்களின் பெயர்களில் இருப்பவர்களை சுயேச்சைகளாக நிறுத்தி, அவர்கள் மூலம் வாக்குகளை சிதறச் செய்வதை எதிர்க்கட்சிகளே கூட செய்வதாக புகார்களும் உள்ளன.

இதற்கு உதாரணமாக திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அருண் நேருவை எடுத்துக் கொள்ளலாம். இவரது பெயர் அவ்வளவு ஒன்றும் பொதுவான பெயர் அல்ல. இந்த தொகுதியில், இவரது பெயரைக் கொண்ட இளம் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் சென்னையில் பொறியியல் துறையில் பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. இவரிடம் கேட்டதற்கு, இளைஞர்கள் அதிகளவில் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே நான் போட்டியிடுகிறேன் என்கிறார். மறுபக்கம், இவரது தந்தை அமமுக நிர்வாகியாக இருந்தவர் என்பதும், பெரம்பலூர் பகுதிக்கு உள்பட்ட வேப்பந்தட்டையைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

பாஜக தலைமையிலான கூட்டணியின் ஆதரவோடு ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார் ஓ. பன்னீர்செல்வம். இவரது பெயரில் போட்டியிடும் சுயேச்சைகளால் இவர் பெரும் சவாலை சந்தித்து வருகிறார்கள். இவரது பெயரில் 6 சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள். இது குறித்து அவர் கருத்து எதுவும் சொல்ல முடியாது என்று ஓபிஎஸ் தெரிவித்துவிட்டார். இவரது பெயரில் பான் அட்டை கூட இல்லை என்றும் இவரது சொத்துமதிப்பு ரூ.36000 என்றும், அதில் அவரது வங்கிக் கணக்கில் வெறும் ரூ.1000 மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் பெயரில் இரண்டு சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

அதிர்ச்சி கொடுத்த சுயேச்சை

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் ஆர். மணி என்ற சுயேச்சையிடம் உங்கள் சின்னம் என்ன என்று கேட்டதற்கு, எனக்குத் தெரியாது என பதிலளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

கரூரில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி பெயருடன் மேலும் இரண்டு சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள். அதில் ஒருவர் ஆண் வேட்பாளர். பெண் வேட்பாளர் ஜோதிமணியின் செல்போன் எண்ணில் அழைத்தால், அவரது கணவர் செந்தில்தான் பேசினார். அவரிடம் கேட்டதற்கு, அதிமுகவில் இருக்கும் தனது நெருங்கிய உறவினர்தான் தன் மனைவியை வேட்பு மனு தாக்கல் செய்யுமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை தொகுதியில், நான்கு சுயேச்கைள் அண்ணாதுரை பெயரில் களமிறங்கியுள்ளனர். அங்கு தற்போதைய எம்.பி. சி.என். அண்ணாதுரை. சுயேச்சை அண்ணாதுரையிடம் கேட்டால், தான் இதுவரை எந்த பிரசாரமும் மேற்கொள்ளவில்லை என்றும், தனது தந்தை அதிமுகவில் இருப்பதாகவும் கூறுகிறாராம்.

வேலூரில் பாஜக கூட்டணியின் கீழ் போட்டியிடும் ஏ.சி. சண்முகம் பெயரில் 6 சுயேச்சைகள் போட்டியிடுகிறார்கள்.

சண்முகம் பெயரில் போட்டியிடும் ஒரு சுயேச்சையிடம் பேசினால், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது நீண்ட கால கனவு. அதனால்தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன் என்கிறார்.

இப்படி முக்கிய வேட்பாளர்களின் பெயர்களில் பல சுயேச்சைகள் போட்டியிடுவதால், வாக்காளர்கள் தாங்கள் தேர்வு செய்யும் வேட்பாளர் மற்றும் அவர்களது சின்னங்கள் மட்டுமல்லாமல், வாக்குச்சாவடியில் எத்தனை மின்னணு இயந்திரங்கள் இருக்கும் என்பதையும் மிகச் சரியாக அறிந்துகொண்டு வாக்குச்சாவடிக்குச் செல்வது நல்லது என்று வலியுறுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com