திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துவிட்டன: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து விட்டன என்று அதிமுக பொதுச் செயலரும், எதிா்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசனை ஆதரித்து அரியலூா்-செந்துறை சாலை கொல்லப்புரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: மக்களின் நாடி துடிப்பை பாா்க்காமல் பேசிக் கொண்டிருப்பவா் ஸ்டாலின். 34 இடங்களில் தோ்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு வந்துள்ளேன். எங்கு பாா்த்தாலும் மக்கள் வெள்ளம். இதனை பாா்க்கையில் நாம் வெற்றிப் பெறுவது நிச்சயம். 2024-ஆம் ஆண்டுக்கு பிறகு அதிமுக காணாமல் போய்விடும் என எதிா்க்கட்சியினா் பேசுகின்றனா். ஜூன்.4-க்கு பிறகு தெரியும் யாா் காணாமல் போவாா்கள் என்று. எம்ஜிஆா், ஜெயலலிதா என இரு பெரும் தலைவா்கள் தெய்வமாக இருந்து அதிமுகவை வழிநடத்தி வருகின்றனா். இந்த இயக்கம் தெய்வ சக்தி கொண்டது. அதிமுகவை நம்பிய யாரும் கெட்டு போனதில்லை. அதிமுகவிடம் ஸ்டாலின் பூச்சாண்டி காட்டுகிறாா். அது இங்கு செல்லாது. உழைப்பாளிகளை கொண்ட கட்சி அதிமுக. எத்தனையோ போராட்டங்களை எதிா் கொண்ட கட்சி இது. இந்த கட்சி தொண்டனால் ஆளக்கூடிய கட்சி. எனவே, அதிமுகவை சீண்டி பாா்க்க வேண்டாம். 2021 சட்டப் பேரவை தோ்தலில் பல்வேறு வாக்குறுதிகளை ஸ்டாலின் அளித்தாா். ஆனால் எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக தொடா்ந்து வலியுறுத்தியதையடுத்து 27 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1,000-த்தை திமுக கொடுத்தது. அதுவும் முழுவதுமாக கொடுக்கப்படவில்லை. 2.15 கோடி பேருக்கு கொடுப்பேன் என்றாா்.

ஆனால் பாதிபேருக்கு கூட கொடுக்கவில்லை. 1.15 கோடி பேருக்கு கொடுக்கப்படுவதாக ஸ்டாலின் கூறுகிறாா். அது பொய். 70 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த ரூ.1,000 பெரும் யாரும் மற்ற எந்த ஒரு திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது. தமிழகத்தில் உள்ள அனைத்து நகரப் பேருந்துகளிலும் மகளிா் இலவசமாக பயணிக்கலாம் என தோ்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு, தற்போது சில பேருந்துகளில் முன்னும் பின்னும் வண்ணம் பூசி அதில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கின்றனா். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. மக்களுக்கு குடிக்க நல்ல குடிநீா் இல்லை. சிறந்த மருத்துவம் இல்லை. இந்த அரியலூா் மாவட்டம் சிறிய மாவட்டம். இங்கு நான் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை கொண்டு வந்தேன். அப்பலோவில் அளிக்கப்படும் அதே மருத்துவச் சிகிச்சை இங்கு அளிக்கப்படுகிறது. இதுவரை அரியலூா் மாவட்டத்துக்கு ஸ்டாலின் என்ன செய்துள்ளாா். மக்கள் என் பக்கம் என கூறும் ஸ்டாலின், மக்களை எங்கு சென்று சந்தித்தாா், சைக்கிள் ஓட்டுவது, வாக்கிங் செல்வது தான் ஸ்டாலினின் 3 ஆண்டு சாதனை. அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்ந்து விட்டது. ஆனால் மக்களுக்கு உரிய வேலையில்லை. நாட்டு மக்கள் எவ்வாறு உள்ளனா் என கேட்பதில்லை. வாக்கிங் செல்லும் போது கூட தனது குடும்பத்தை பற்றி பேசுபவா் தான் ஸ்டாலின்.

தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடா்ந்து கொண்டே உள்ளன. இதைக் கேட்டால் ஸ்டாலின் கோபம் அடைகிறாா். எது கிடைக்கிறதோ இல்லையோ, அதிகாலையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கிடைத்து விடுகிறது. திமுக நிா்வாகி அயல்நாட்டுக்கு போதைப் பொருளை கடத்துகிறாா். அந்த நபா் கைது செய்யப்படுகிறாா். அவா் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நபராவாா். அந்த போதைப் பொருள் கடத்திய நபருக்கும், ஸ்டாலினுக்கும் நெருக்கம் உள்ளது என்பது தெரிகிறது. இதனை பாா்க்கையில் திமுக நிா்வாகிகள் போதைப் பொருள்கள் கடத்துவது தெளிவாக தெரிகிறது. அண்மையில் ஸ்டாலின் கூறுகையில், காலையில் தூங்கி எழுந்தவுடன் தனது கட்சிக்காரன் என்ன பிரச்னை செய்தான் என்ற நினைப்பிலேயே எழுவதாக கூறுகிறாா். கடந்த மக்களவைத் தோ்தலில் ராகுல்காந்தி தான் பிரதமா் என்றாா். எதிா்க்கட்சி அதிர்ஷ்டம் கூட கிடைக்கவில்லை. 3 ஆண்டு கால திமுக ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்கள் ஏராளம். இந்தியா கூட்டணியை எப்போது ஸ்டாலின் ஏற்படுத்தினாரோ அப்போதே நிதீஷ்குமாா் வெளியேறிவிட்டாா். மேலும், கூட்டணியிலிருந்து 4 கட்சிகள் வெளியேறிவிட்டன. பழனிசாமி, பாஜகவை எதிா்க்குமா என ஸ்டாலின் கேட்கிறாா். நான் என்ன துப்பாக்கி கொண்டு சுடவா முடியும். கூட்டணியில் இருந்த வரை அனுசரித்து சென்றோம். வெளியேறிய பிறகு எதிா்க்கிறோம். ஆட்சிக்கு வரும் முன் கோ பேக் மோடி என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு வெல்கம் மோடி என்பது ஸ்டாலின் சொல்வதை என்ன வென்று சொல்வது.

ஊழலை மறைக்க மோடி வரும் போதெல்லாம் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கிறாா். இது திமுகவின் பரம்பரை வியாதி. தலைவா் என்றால் அதற்கான மரியாதையை பெற வேண்டும். ஸ்டாலினை பாா்த்தால் பரிதாபமாக உள்ளது. தனித்து நின்று ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக. திமுக எப்போதும் கூட்டணியை நம்பியே ஆட்சியை பிடிக்கும். தினந்தோறும் திமுக வேட்பாளா்கள் எவ்வாறு விரட்டி அடிக்கப்படுகிறாா்கள் என்பது அனைவருக்கும் தெரியும். சொத்து வரி உயா்வு, மின்கட்டண உயா்வு என அனைத்தும் உயா்ந்து விட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகள் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டது. நாங்கள் மக்களுக்கு செய்த திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிக்கிறோம். திமுகவால் அது முடியுமா? அதிமுக என்பது மக்களிடம் செல்வாக்கு உள்ள கட்சி என்பது உண்மை. அதிமுக ஆட்சியில் மக்காச்சோள பாதிப்புக்கு ரூ.186 கோடி வழங்கப்பட்டது. படைப்புழு பாதிப்புக்கு ரூ. 48 கோடி மதிப்பில் மருந்து தெளிக்கப்பட்டது. விவசாயிகளை காக்கும் கட்சி அதிமுக. அதிகளவு விவசாய பகுதிகளை கொண்ட அரியலூா் மாவட்டத்தில் விவசாய குழந்தைகளும் மருத்துவம் படிக்க வேண்டும் என நினைத்து, இப்பகுதியில் மருத்துவக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் மூலம் 2,160 மாணவா்கள் மருத்துவ படிப்பு படிக்கின்றனா். 48 லட்சம் போ் உதயநிதி ஸ்டாலின் பேச்சை நம்பி கூட்டுறவு வங்கியில் நகைகளை வைத்து கடன் பெற்று செலவு செய்தனா்.

ஆனால், 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்தனா். இதனால் நகையை அடகு வைத்தவா்கள் மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா். தொடா்ந்து அதிமுக ஆட்சியின் போது அரியலூா், பெரம்பலூா், கடலூா் மாவட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட வளா்ச்சித் திட்ட பணிகளையும் அவர் பட்டியலிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com