இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

தமிழ் மொழி பழமையும் அழகும் கொண்டதும் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த சகோதரியாக விளங்கும் மொழியாகும்.
இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சி நரசிம்மனை ஆதரித்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது:

இந்திய நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்த மண்ணின் பெரும் போராளிகளும் தரைப்படை மற்றும் கடற்படை திறன்களில் சிறந்து விளங்கிய ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரின் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். தமிழ் மொழி பழமையும் அழகும் கொண்டதும் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மொழிகளுக்கும் மூத்த சகோதரியாக விளங்கும் மொழியாகும்.

நம்முடைய புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டபோது நீதி மற்றும் சுதந்திரத்தின் சின்னமான செங்கோலை நம்முடைய பிரதமர் முழுக்க முழுக்க சிரத்தை எடுத்து நிறுவியதில் இருந்தே நம்முடைய பிரதமரின் மனதுக்கு தமிழ் பண்பாடு எத்தனை நெருக்கமாக உள்ளது என்பதை நாம் அறியலாம்.

தமிழ்நாடு என பேசும் போது நம் நினைவுக்கு வரும் முதல் சொல் செங்கோல். இந்திய ஜனநாயக திருக்கோயிலில் செங்கோலை நிறுவியதன் மூலம் நமது பிரதமர் மோடி, தமிழ் பண்பாட்டையும் இந்திய தேசியவாதத்தில் தமிழகத்தின் பெரு பங்களிப்பையும் போற்றுவது மட்டுமின்றி அதற்கு முழுமையாக மதிப்பளித்து இருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் பெருமைப்படுத்தப்பட்டுள்ளது.

மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவாக அவரது பிறந்த நாளான டிசம்பர் 11ஆம் தேதி, தேசிய மொழி தினமாக அறிவிக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் 74 ஆவது பொது சபையில் உரையாற்றிய பிரதமர் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பறை சாற்றினார். தமிழ் கலாச்சாரத்தை போற்றி வளர்ப்போம் என்று முடிவு செய்துள்ளார் பிரதமர்.

பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் உலகம் எங்கும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்களை உருவாக்குவதாக அறிவித்திருக்கிறோம்.

சுதந்திரத்திற்குப் பிறகு 75 ஆண்டுகளில் இந்தியா நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு பெரும்பாலான அரசாங்கங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு தேவையான வேகத்தில் செயல்படவில்லை. ஆனால், பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு, ஆட்சிக்கு வந்ததிலிருந்து நாட்டின் வளர்ச்சிப் பாதை ஏற்றம் கண்டுள்ளது.

இன்று உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக திகழ்வதுடன், உலகின் மிக வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாகவும் இந்தியா மாறி உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இந்தியாவிற்கு முதலீடுகள் வருகின்றன. தமிழகத்திற்கும் ஏராளமான முதலீடுகள் வந்துள்ளன.

இந்திய நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றத்தில் உற்பத்தி துறையில் பங்களிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014 ஆம் ஆண்டில் நாட்டின் 92 சதவீத மொபைல் போன்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் இன்று இந்தியாவிலிருந்து மொபைல் போன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

முன்பு நாம் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக மட்டுமே அறியப்பட்டோம். இன்று இந்தியா உலகின் முதல் 25 பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக அறியப்படுகிறது. 2014 -இல் வெறும் ரூ.600 கோடியாக இருந்த நமது பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி , இன்று 21 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

நாட்டில் பிராட்பேண்ட் இணைப்பு 20 சதமாக இருந்த நிலையில் இன்று அது 80 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட 99 சதவீத கிராமப்புறங்கள் நடைபாதை சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 3.5 லட்சம் கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 80 ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்த நிலையில், இன்று 148 விமான நிலையங்களாக உயர்ந்துள்ளது .நாட்டில் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று 22 புதிய மருத்துவமனைகள் நாட்டில் கட்டப்பட்டுள்ளன அல்லது கட்டப்பட்டு வருகின்றன. நாங்கள் வாக்குகளை பெறுவதற்காகவோ அல்லது ஆட்சி அமைப்பதற்காகவோ அரசியல் செய்வதில்லை. இந்த நாட்டையும் சமூகத்தையும் கட்டி எழுப்ப மட்டுமே அரசியல் செய்கிறோம். இல்லையென்றால் எங்கள் அரசாங்கம் இரண்டு பாதுகாப்பு வழித்தடங்களை உருவாக்கிய போது ஒன்று உத்தரப்பிரதேசத்திலும் மற்றொன்று தமிழ்நாட்டிலும் திறக்கப்பட்டிருக்காது.

எங்களது அரசியல் அடித்தளம் தமிழ்நாட்டில் அவ்வளவு வலுவாக இல்லை. ஆனால் நாங்கள் இங்கே ஒரு பாதுகாப்பு வழிதடத்தை உருவாக்கியிருக்கிறோம். நாட்டின் வளர்ச்சி கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். இந்த முதலீடுகள் அனைத்தும் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைக் கொண்டு வரும். துடிப்பான ஸ்டார்ட் அப் கலாச்சாரமும் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இளைஞர்கள் வேலை தேடுபவர்கள் என்பது மாறி அடுத்தவர்களுக்கு வேலைகளை உருவாக்குபவர்களாக மாறுவார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்கள் முன்னுரிமை.

வளர்ந்த இந்தியாவிற்கு தமிழ்நாடு தலைமை தாங்க வேண்டிய தருணம் இன்று. ஆனால் தமிழகத்தை பழமையான சிந்தனையில் சிக்க வைக்க நினைக்கிறது திமுக. ஒட்டுமொத்த திமுகவும் குடும்ப நிறுவனமே தவிர வேறில்லை. திமுகவின் குடும்ப அரசியலால் தமிழக இளைஞர்கள் முன்னேற வாய்ப்பு இல்லை. தமிழக இளைஞர்களுக்கு பாஜக மட்டுமே சாத்தியமான மற்றும் துடிப்பு மிக்க விருப்பமாக விளங்குகிறது. இன்றைய இளைஞர்கள் பழமையான அரசியலை விரும்புவதில்லை. இந்தியாவுடன் எதிர்காலத்துடன் இளைஞர்களின் எதிர்காலமும் பாதுகாப்பானதாக இருக்கும் என்ற அரசியல் நிலைப்பாட்டுடன் அவர்கள் அரசியலுக்கு வர விரும்புகின்றனர். இந்தப் பணியை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே செய்ய முடியும்.

தமிழகத்திற்கு திமுக என்ன கொடுத்தது. குடும்ப ஆட்சியையும் ஊழலை மட்டுமே திமுக கொடுத்துள்ளது. தேசம் முதலில் என்று பாஜக சொல்கிறதே ஆனால் திமுக குடும்பமே முதலில் என்கிறது.

ஊழலுக்கு திமுகவும் அதன் இந்திய பங்காளி காங்கிரசும் காப்புரிமை பெற்றுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மணல் கடத்தல்காரர்களால் தமிழகத்திற்கு ரூ. 4600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக தில்லியில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் இந்தப் பணம் திமுகவின் ஊழலுக்கு இரையாகிறது. தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் கூட போதைப் பொருள்கள் வியாபாரத்திற்கு பலியாகின்றன. இந்த போதை மாஃபியாக்கள் யாருடைய பாதுகாப்பை அனுபவிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அண்மையில் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல்காரன் உடன் எந்தக் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி, தனது ஒன்பது ஆண்டு கால ஆட்சி காலத்தில் தெளிவான நோக்கத்துடன் பணியாற்றுவதில் நம்பிக்கை கொண்டவர் என்பதை நிரூபித்துள்ளார். அவருடைய கொள்கைகள் குறித்து ஒருவர் விவாதம் செய்யலாம். ஆனால் அவருடைய நோக்கத்தை யாரும் கேள்வி எழுப்ப முடியாது. பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் சேற்றை வீசுகிறார்கள். ஆனால் எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறீர்களோ அவ்வளவு தாமரைகள் இங்கு மலரும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தமிழகத்தில் திமுக இந்து மதத்தை அவமதிக்கிறார்கள். இந்து மதம் எந்த சக்தியில் நம்பிக்கை கொண்டுள்ளதோ அந்த சக்தியை அழிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.தமிழகத்தில் சக்தி காஞ்சி காமாட்சி. மதுரை மீனாட்சி. இந்து மதத்தில் சக்தி என்றால் தாய் சக்தி என்று பொருள். பெண் சக்தி.

பெண் சக்தியையும் தாய் சக்தியையும் அழித்து விடுவோம் என்று திமுக கூட்டணியினர் கூறி வருகின்றனர் இந்தக் கூட்டணி உறுப்பினர்கள் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை அவமதிப்பதோடு இந்து கடவுளையும் தெய்வங்களையும் அவமதிக்கின்றனர். இந்தக் கூட்டணி பெண்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு தமிழகம் சாட்சி.

ஜெயலலிதா உயிருடன் இருந்த பொழுது அவரிடம் திமுகவினர் எப்படி நடந்து கொண்டார்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கும். இதுதான் திமுகவின் உண்மையான முகம்.

அதனால் தான் திமுகவினர் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கிறார்கள். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் எனக்கு ஜெயலலிதாவின் நினைவு தான் வரும். அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர். ஏழைகளுக்காக உழைத்து அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வதே ஜெயலலிதாவின் முக்கிய நோக்கமாக இருந்தது.

காங்கிரஸ் ஆட்சியில் இலங்கையால் எத்தனை மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். சில நேரங்களில் மீனவர்கள் உயிரையும் இழக்க நேரிட்டது. ஆனால் முதன்முறையாக இலங்கை ஊடான நல்லுறவை பயன்படுத்தி மீனவர் சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் ஒரு அரசாங்கம் நாட்டில் உள்ளது. ஆனால் காங்கிரஸ் இந்த நாட்டில் இதுபோன்ற பல தவறுகளை செய்துள்ளது. அதற்காக இந்தியாவும் நமது மீனவர் சமூகமும் பெரும் விலை கொடுக்க வேண்டி இருந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி கச்ச தீவு இழப்பு மற்றும் மீனவர் சமூகம் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்கு திமுகவும் காங்கிரசும்தான் முழு பொறுப்பு.

இந்தியா கூட்டணி நிரந்தரமானது அல்ல. அவர்கள் ஒன்றிணைவதற்கு ஒரே காரணம் அதிகாரம்தான். எனவே, பாஜக வேட்பாளர் சி நரசிம்மனை ஆதரித்து, தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com