வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வாக்களிக்க ஆர்வம் காட்டாத சென்னை மக்களால் வாக்குப்பதிவு மந்தம்
வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்
-

சென்னையில் உள்ள பெரும்பாலான மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததால், சென்னையின் மூன்று மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மந்தமாக உள்ளது.

கடுமையான கோடை வெப்பம் கொளுத்தி வருவதால், சென்னை மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

பொதுவாக மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். ஆனால், சென்னையில் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பெரிய அளவில் கூட்டம் காணப்படவில்லை.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 51.41 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரியில் 57.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லிலும் 57.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கள்ளக்குறிச்சியில் 57.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதுபோல, குறைந்தபட்சமாக வாக்குகள் பதிவாகியிருக்கும் மூன்று தொகுதிகளும் சென்னைக்கு உள்பட்ட மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை தொகுதிகளாகவே உள்ளன.

சென்னையில் வசித்து வந்த பலரும், சொந்த ஊர்களில் வாக்களிப்பதற்காக, சென்னையிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். அனைவரும் வாக்களிக்க வசதியாக விடுமுறை விடப்பட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது.

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்
தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

அதற்கேற்ப வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்துக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறை அறிவிக்கப்பட்டும் கூட, சென்னை மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை.

காலையிலிருந்தே சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாகவே நடந்து வருகிறது. தெற்கு, வடக்கு, மத்திய சென்னை என மூன்று தொகுதிகளிலும் 44 முதல் 41 சதவீத வாக்குகள்தான் 3 மணி வரை பதிவாகியுள்ளன. இதற்கடுத்த இடத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில், 45 சதவீத வாக்கு பதிவாகியிருக்கிறது.

இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடையவிருக்கிறது. கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டு அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலில் 950 பேர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர். தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com