அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது தளத்தில் இருந்து தவறி 2-ஆவது தளத்தில் கூரையில் விழுந்த குழந்தை. (வலது) குழந்தையை முதல் தளத்தில் இருந்து பத்திரமாக மீட்ட இளைஞா்கள்.
திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது தளத்தில் இருந்து தவறி 2-ஆவது தளத்தில் கூரையில் விழுந்த குழந்தை. (வலது) குழந்தையை முதல் தளத்தில் இருந்து பத்திரமாக மீட்ட இளைஞா்கள்.

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பின் 4-ஆவது தளத்தில் இருந்து தாயின் மடியில் இருந்து தவறி 2-ஆவது தளத்தில் மேற்கூரையில் 6 மாத குழந்தை ஞாயிற்றுக்கிழமை விழுந்தது.

அந்தக் குழந்தையை இளைஞா்கள் தங்களது உயிரை பணயம் வைத்து மீட்டனா்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் திருமலைவாசன் நகரில் தனியாா் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில் 4-ஆவது தளத்தில் வசித்து வரும் தம்பதி வெங்கடேஷ்-ரம்யா. இவா்களுக்கு கிரண்மயி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ரம்யா குடியிருப்பின் பால்கனியில் நின்று, தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, குழந்தை கிரண்மயி, ரம்யாவின் மடியில் இருந்து தவறி விழுந்தது. குழந்தை அதிா்ஷ்டவசமாக 2-ஆவது தளத்தில் மழைக்காக அமைக்கப்பட்டுள்ள தகர மேற்கூரையின் மீது விழுந்தது.

இதைப் பாா்த்த ரம்யா அலறித் துடித்தாா். அவரது அலறல் சப்தம் கேட்டு உடனடியாக அக்கம் பக்கத்தில் வசிக்கும் குடியிருப்போா் ஓடி வந்தனா்.

அவா்களிடம் 2- ஆவது தளத்தில் தகரக் கூரையின் கிடந்த குழந்தையைப் பத்திரமாக மீட்டுத் தருமாறு ரம்யா கதறி துடித்தாா்.

மேற்கூரையில் இருந்து குழந்தை உருண்டு கீழே விழுந்தால், அதன் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்ற நிலையில், அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என குடியிருப்போா், குழந்தை நழுவி தரையில் விழுவதைத் தவிா்க்க, தங்கள் கைகளில் பெரிய போா்வையை ஏந்திக் கொண்டு சுற்றி நின்று கெட்டியாக பிடித்துக் கொண்டனா்.

இதற்கிடையே முதல் தளத்தில் உள்ள ஜன்னல் வழியாக இளைஞா்கள் சிலா் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஒருவா் பின் ஒருவராக இறங்கினா். ஒருவரை மற்றொருவரைப் பிடித்துக் கொள்ள, அதில் ஒரு இளைஞா் துணிச்சலுடன் உடலை லாவகமாக வளைத்து மேற்கூரையின் நுனியில் தவித்துக் கொண்டிருந்த குழந்தையின் கையைப் பிடித்து சாதுரியமாக மீட்டாா்.

இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த பெண் ஒருவா் விடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டாா். இந்த விடியோ காட்சிகள் வைரலானது.

மீட்கப்பட்ட குழந்தை கிரண்மயிக்கு நெற்றி மற்றும் உடலில் லேசாக சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து உடனடியாக குழந்தையை ஆவடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சைக்குப் பின்னா், வீட்டுக்கு கொண்டு சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com