/

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி. சண்முகம் மனு: தீா்ப்பு ஒத்திவைப்பு

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

News image

சி.வி.சண்முகம்.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 1:53 am IST

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

தமிழ்நாடு அரசின் தாலிக்கு தங்கம் திட்டம், முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாா் கைது உள்ளிட்ட விவகாரத்தில்  அரசையும், முதல்வா் ஸ்டாலினையும் விமா்சித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீது போலீஸில் புகாா் செய்யப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், சி.வி.சண்முகம் மீது திண்டிவனம் மற்றும் விழுப்புரம் போலீஸாா் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 4 வழக்குகளை பதிவு செய்தனா்.

இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில், சி.வி.சண்முகம் நான்கு மனுக்களை தாக்கல் செய்தாா். இந்த வழக்குகள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஜான் சத்யன் ஆஜராகி, ‘முன்னாள் அமைச்சரான  சி.வி.சண்முகத்தின் பேச்சு காரணமாக சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அரசு தான் புகாா் அளித்திருக்க வேண்டும். ஆனால்  இந்த புகாா் திமுக நிா்வாகியால் அளிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

அதற்கு நீதிபதி, ‘மனுதாரரின் பேச்சு மோசமானது தான். அவரது பேச்சை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் இதற்காக இருபிரிவினருக்கிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா’ என்று கேள்வி எழுப்பினாா். அதற்கு காவல்துறை தரப்பில் வழக்குரைஞா்  கே.எம்.டி.முகிலன், ‘சி.வி.சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன்மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, அந்தப்பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்படும்.  சி.வி.சண்முகம் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கிராம நிா்வாக அதிகாரி உள்ளிட்ட 4 போ் புகாா் அளித்துள்ளனா். அதில் ஒரு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று விளக்கம் அளித்தாா். இதையடுத்து நீதிபதி, இந்த மனுக்கள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தாா்.