சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு தமிழக காவல் துறையில் 23 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கப்படவுள்ளது.
இந்திய அளவில் தனிச்சிறப்புடன் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு ஆண்டுக்கு 2 முறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவா் விருதுகள் வழங்கப்படுகின்றன. போலீஸாரின் செயல்பாடு, சாதனைகள் மற்றும் நன்மதிப்பு அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றது.
அந்த வகையில், நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை, தீயணைப்புத் துறை, மத்திய துணை ராணுவப் படை, ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,037 பேர் குடியரசுத் தலைவரின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுகள் தமிழகத்தை சேர்ந்த டிஜிபி வன்னிய பெருமாள் மற்றும் ஏடிஜிபி அபின் தினேஷ் மோடாக் ஆகிய இரண்டு காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
மேலும், குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருதுகள், தமிழக காவல் துறையைச் சோ்ந்த 21 பேருக்கும், ஊர்க்காவல் படையை சேர்ந்த 3 வீரர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இவர்கள் அனைவருக்கும் தில்லி செங்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திர தினவிழாவில் பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளது.