எந்த பேராசையும் இல்லை; கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம்! - திருமாவளவன்

எந்த பேராசையும் இல்லை; கூட்டணியில் தெளிவாக இருக்கிறோம்! - திருமாவளவன்

சென்னையில் விசிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தொல். திருமாவளவன் பேச்சு.
Published on

கூட்டணி விவகாரத்தில் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தங்களுக்கு எந்த பேராசையும் இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்ப்டே எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்று நூலான 'ICONOCLAST' (ஐகானோக்ளாஸ்ட்) நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில் விசிக தலைவர் திருமாவளவன், விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் பேசிய திருமாவளவன்,

'அம்பேத்கரை கடவுள் என்று கூறுகிறார் மோடி. மக்கள் அதை நம்பி ஏமாந்து போகிறார்கள். பாஜகவினர் பெரியாரை எதிரியாகக் காட்டுகிறார்கள். ஆனால், அவர்கள் அம்பேத்கரை எதிரியாகக் காட்ட முடியாது.

மற்றவர்கள் விரும்புவதை நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்கள் விரும்புவதைச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

உங்கள் எதிர்பார்ப்புகளை எல்லாம் எதிர்வினையாற்றுவதற்காகவா நாங்கள் இயக்கம் வைத்திருக்கிறோம்?

நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டில் தெளிவாக இருக்கிறோம். கூட்டணி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். எனவே நாங்கள் பதற்றப்படத் தேவையே இல்லை. எதை எந்த நேரத்தில் அணுக வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். தேர்தல், கூட்டணி என்பதெல்லாம் விசிகவுக்கு இரண்டாவதுதான். இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

எங்களுக்கு எந்த பேராசையும் இல்லை. அங்கே போனால் அள்ளலாமா, இங்கே போனால் வாழலாமா, இந்த வாய்ப்பை விட்டால் என்னாவது? என எங்ககு எந்த பேராசையும் இல்லை.

ராமதாஸை பின்பற்ற வேண்டும் என்று ஒருவர் கூறுகிறார். நாங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் வழியைப் பின்பற்றுபவர்கள். அவர் எங்களுக்கு கருத்தியல் அடையாளம்.

அரசியல் அதிகாரம் முக்கியமல்ல, அந்த அதிகாரத்தின் மூலம் என்ன தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதே முக்கியமானது. அந்த தெளிவு இல்லாமல் நாங்கள் இந்த அரசியல் களத்தில் இல்லை.

திருமா தடுமாறுகிறார், பின்வாங்குகிறார் என்று கூறுகிறார்கள். அதனால் நீங்கள் எதுவும் குழப்பமடைய வேண்டாம். நாங்கள் தெளிவாக இருக்கிறோம்.

நம்முடைய சுயமரியாதையை, தன்மானத்தை, கருத்தியல் நிலைப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது' என்று பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்