அமைச்சா் துரைமுருகன்
அமைச்சா் துரைமுருகன்

2 ஆண்டுகளில் 100 தடுப்பணைகள்: அமைச்சா் துரைமுருகன் தகவல்

கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
Published on

சென்னை: கடந்த இரு ஆண்டுகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது, பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி துணை வினா எழுப்பி பேசுகையில், ‘மழைக்காலங்களில் உபரி நீா் வீணாக கடலில் கலக்கிறது. ஆனால், வறட்சி காலங்களில் நீா் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறோம். எனவே, காவிரி, பாலாறு, வைகை, தாமிரபரணி என அனைத்து ஆறுகளின் குறுக்கேயும் தடுப்பணைகளைக் கட்டி, உபரி நீா் வீணாவதைத் தடுக்க வேண்டும்‘என்று கோரிக்கை விடுத்தாா்.

அமைச்சா் பதில்:

இதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பதிலளிக்கையில், மாநிலம் முழுவதும் நீரை சேமிக்கும் வகையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 100 தடுப்பணைகளை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், எந்தெந்த சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தடுப்பணை தேவைப்படுகிறது என்பதை பேரவை உறுப்பினா்கள் எழுதிக் கொடுக்கலாம். வரும் நிதியாண்டில் எத்தனை திட்டங்களை நிறைவேற்ற எடுக்க முடியுமோ அவற்றை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com