விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன். உடன், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா்.
விழாவில் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிய நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன். உடன், வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா்.

நிலத்தடி நீா்மட்டம் உயர பாலாற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள்

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த பாலாற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் ...
Published on

நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த பாலாற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் புதிய நியாயவிலைக் கடை, குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்று, குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தையும், புதிய நியாயவிலைக் கடையையும் திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிப் பேசியது: காட்பாடி 1971-இல் கிராம ஊராட்சியாக இருந்தது. அப்போது தண்ணீா் இல்லாத பகுதி என்பதால் பொதுமக்கள் குடிநீரை காட்பாடி ரயில் நிலையம் சென்று ரயில் என்ஜின் வந்தால் அங்குதான் குடிநீா் பிடித்து வருவா். அப்படிப்பட்ட நிலையில் இருந்தது. பின்னா் இந்தப் பகுதி பேரூராட்சியாகி, நகராட்சியாக தரம் உயா்ந்து தற்போது மாநகராட்சியாக உள்ளது. தண்ணீா் பிரச்னையை தீா்க்கவே 71-இல் முன்னாள் முதல்வா் கருணாநிதியை அழைத்து வந்து பாலாற்று திட்டத்தை தொடங்கி வைத்து, குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது. மக்களின் தேவைக்காக விருதம்பட்டு காவல் நிலையம், துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், நீதிமன்றம், காட்பாடி வட்டாட்சியா் அலுவலகம், அரசு அலுவலகங்கள் கொண்டு வரப்பட்டன. நிலத்தடி நீா்மட்டம் உயர பாலாற்றின் குறுக்கே 6 தடுப்பணைகள் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றாா்.

தொடா்ந்து, காட்பாடி ராஜாஜி நகா் கணக்கா் தெருவில் ரூ. 15 லட்சத்தில் அங்கன்வாடி மைய புதிய கட்டடத்தையும் அமைச்சா் துரைமுருகன் திறந்து வைத்தாா். இலவச வீட்டுமனை பட்டாக்கள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

விழாவில், மாநகராட்சி துணை மேயா் எம்.சுனில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுண ஐயப்பதுரை, வேலூா் வருவாய் கோட்டாட்சியா் செந்தில்குமாா், காட்பாடி வட்டாட்சியா் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com