/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும்! -திருமாவளவன்

தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்!

News image
Updated On :15 டிசம்பர் 2024, 9:03 am

DIN

தமிழகம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்திற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு தேவையான நிவாரண உதவியை மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டபோது, அதை அவர்கள் பொருட்படுத்தவில்லை.”

“வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5, 000 நிதியுதவி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். அந்த வகையில்,மழை, வெள்ள நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ரூ. 5,000 வழங்கிட வேண்டும். கால்நடைகள், பொருள் சேதம் கணக்கீடு நடத்தப்பட்டு அவற்றுக்கேற்ப நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்.”

“மத்திய அரசு ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறது. அரசமைப்பு சட்டத்தை போற்றிக்கொண்டே, அதைப் புகழ்ந்து கொண்டே, அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. ஏற்கனவே 370-ஆவது சட்டப்பிரிவை நீக்கினார்கள், சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள். இவையெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானவை. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அனைவரும் அணி திரள வேண்டும். இது குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேச முற்பட்டபோது, எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை.”

“அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யலாம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. ஆனால் அதன் அடிப்படை கூறுகளில் கை வைக்க கூடாது. அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான், தேர்தல் ஆணையம் உள்ளது. இன்று பாஜக அரசு தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி அதன் அதிகாரத்தையே பறிக்கிறது. அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். பகுதி பகுதியாக தேர்தல் நடத்துவதே தேர்தல் ஆணையத்தால் முடியவில்லை. ஒரே நாடு; ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் மீது சுமத்தப்படும் சுமை. பொருளாதார விரயத்தையும், நேர விரயத்தையும் கட்டுப்படுத்த ஒரே நாடு; ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம் என்கிறார்கள். அது அப்பட்டமான பொய்.

அதிபர் ஆட்சி முறையை, ஒரே கட்சி ஆட்சியில் கொண்டு வர வேண்டும், மாநில கட்சிகளே இருக்க கூடாது என்கிற உள்நோக்கத்தில் தான் இதை கொண்டு வருகிறார்கள்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட கூடிய அரசை யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதை உறுதிப்படுத்த பார்க்கிறார்கள். தற்பொழுது உள்ள ஜனநாயகம், எந்த நேரத்திலும் கேள்வி எழுப்பலாம், எப்பொழுது வேண்டுமானாலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம்.

ஒரே நாடு; ஒரே தேர்தல் திட்டத்தால் கூட்டணி கட்சிகளின் தயவே இல்லாமல் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படியொரு நிலையைதான் கொண்டுவர பார்க்கிறார்கள்.இது ஜனநாயகத்திற்கு அரசமைப்பு சட்டத்துக்கும் மிகவும் ஆபத்தானது.”

“ஆதவ் அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில், இதுபோன்ற முரண்பாடான கருத்தை கூறுவது தவறு. அவர் அப்படி பேசக்கூடாது. ஆறு மாதத்திற்குப் பின், கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால், அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பதை தற்பொழுது உணர முடிகிறது. ஆதவ் அர்ஜுன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது கண் துடைப்பு அல்ல, எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில்தான் நீக்கப்பட்டுள்ளார்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.