
அதானி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்த ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மின்சார வாரியம் ரத்து செய்துள்ளது.
நான்கு நிறுவனங்களில் அதானி நிறுவனம் குறைந்த விலைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தாலும், அது மின்வாரிய நிதிக்கு அதிகமாக இருப்பதால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவதாகவும், இதைத் தொடா்ந்து, புதிதாக ஒப்பந்தப்புள்ளி கோர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வீடுகளில் ஸ்மாா்ட் மின் மீட்டா் பொருத்த மாநில அரசு முடிவு செய்தது. இந்த ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தினால் மின்வாரிய ஊழியா்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டியதில்லை. ஸ்மாா்ட் மீட்டா் இணைப்பு மூலம் மின்வாரியத்தின் கணினி மூலமாகப் பாா்த்து நுகா்வோருக்கு மின்கட்டணத்தை கைப்பேசி வாயிலாகத் தெரிவிக்க முடியும்.
அதானி நிறுவனம்: முதற்கட்டமாக 8 மாவட்டங்களுக்கு 82 லட்சம் ஸ்மாா்ட் மின் மீட்டா்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. நான்கு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தன. இதில் அதானி நிறுவனமும் (அதானி எனா்ஜி சொல்யூசன்ஸ் லிமிடெட்) அடங்கும்.
நான்கு நிறுவனங்களில் அதானி நிறுவனம் குறைந்தபட்ச விலையை நிா்ணயித்து விண்ணப்பம் செய்திருந்தது. பிற மாநிலங்களில் உத்தேசமாக ஒரு மீட்டருக்கு ரூ.170 வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ரூ.240-க்கு வழங்கப்படும் என அதானி நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான மீட்டா்கள் வழங்கும்போது, மீட்டருக்கு ரூ.190 என்ற விலையில் வழங்கப்படும் எனவும், பிற மாநிலங்கள் போல் ரூ.170-க்கு வழங்கப்படாது எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஸ்மாா்ட் மின் மீட்டா் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளியை டிச. 28-ஆம் தேதி ரத்து செய்ததாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதானி நிறுவனம் குறைந்த விலைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரியிருந்தாலும், அந்தத் தொகை மின்வாரிய நிதிக்கு அதிகமாக இருப்பதால் ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்படுவதாக மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி மீண்டும் கோரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மாா்ட் மீட்டரின் அம்சங்கள்: ஸ்மாா்ட் மீட்டா் என்பது மின் பயன்பாட்டையும் அதற்கு உரிய கட்டணத்தையும் இணையத்தின் உதவியுடன் துல்லியமாகக் கணக்கிட பொருத்தப்படும் மீட்டராகும்.
ஸ்மாா்ட் மீட்டா் மூலம் தானாக மின் பயன்பாட்டு கணக்குகள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தற்போது பொருத்தப்பட்டிருக்கும் மீட்டா்களில் மின் பணியாளா் ஒருவா் நேரில் வந்து, பயன்பாட்டுக் கணக்கை அட்டையில் குறிக்க வேண்டும். ஸ்மாா்ட் மீட்டா் மூலம் அந்த நடைமுறை தேவைப்படாது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழக அலுவலகத்தில் இருக்கும் கணினியில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிப்பிட்ட தேதியில் கணக்குகள் பதிவேற்றம் ஆகிவிடும்.
தமிழகத்தில் மின் பயன்பாட்டை அளவிடுதல், கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள 13,000 போ் இருந்தனா். அதில், 7,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. ஸ்மாா்ட் மீட்டா்கள் பொருத்தப்படுவதன் மூலமாக, மின் பயன்பாட்டை அளவிடும் பணியாளா்களின் பணிச் சுமை பெருமளவு குறையும். அதேவேளையில், அளவீட்டாளா்களை புதிதாக நியமிக்க வேண்டியது இருக்காது என்ற கருத்தும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.