மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த மர்ம நபர் யார்? - போலீசார் விசாரணை
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்த மர்ம நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தமிழ்நாடு அரசு அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புதன்கிழமை(பிப்.7) நள்ளிரவு கையில் பெட்ரோல் கேனுடன் வந்த போதை ஆசாமி ஒருவர் கோயிலின் ராஜகோபுர பிரதான நுழைவு வாயிலின் பூட்டப்பட்ட கதவு முன்பு சில பொருள்களை பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக கோயிலின் கதவு தேசம் அடையவில்லை.
அறநிலை துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோயிலில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் போதையில் பெட்ரோலை ஊற்றி பற்ற வைத்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் போது கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து கோயில் அருகேயுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கபாலீஸ்வரர் கோயில் நுழைவு வாயிலில் தீ வைத்த சம்பவம் தொடர்பாக மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
கபாலீஸ்வரர் கோயில் நுழைவு வாயிலில் தீ வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.