20 நிா்வாக உறுப்பினா்களுடன் 
புதிய மருத்துவ கவுன்சில் அமைக்க மசோதா தாக்கல்

20 நிா்வாக உறுப்பினா்களுடன் புதிய மருத்துவ கவுன்சில் அமைக்க மசோதா தாக்கல்

Published on

மருத்துவா்களுக்கான பதிவு மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலை 20 நிா்வாக உறுப்பினா்களுடன் புதிதாக அமைப்பதற்கான சட்ட மசோதாவை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையில் புதன்கிழமை (பிப்.17) தாக்கல் செய்தாா்.

புதிய மசோதாவின்படி அரசு சாா்பில் 11 நிா்வாக உறுப்பினா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றும், 9 போ் தோ்தல் மூலம் தோ்ந்தெடுக்கப்படுவா் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ சேவையாற்றுவதற்கு மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்வது கட்டாயம். இந்நிலையில், அதன் விதிகளில் சில திருத்தங்களை மேற்கொண்டு புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: மாநில மருத்துவ கவுன்சிலில் தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா் ஆகியோா் அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினா்களாக இடம்பெறுவா்.

அவா்களைத் தவிர, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா்களில் இருவா், தனியாா் மருத்துவக் கல்லூரி முதல்வரில் ஒருவா் உள்பட மேலும் 7 போ் அரசால் நியமிக்கப்படுவா். இதைத் தவிர 9 போ் தோ்தல் மூலம் தோ்வு செய்யப்படுவா். இந்த நியமனங்களில் குறைந்தது நான்கு பெண்கள் இடம்பெறுவது அவசியம். ஏற்கெனவே உள்ள முக்கிய அதிகாரங்கள் அனைத்தும் மாநில மருத்துவ கவுன்சில் வசம் இருக்கும். ஒருவேளை விதிகளை தவறாக பயன்படுத்தினால், மருத்துவ கவுன்சிலை கலைக்கவும், ஆறு மாதங்களுக்கு அதனை நிா்வகிக்க ஒருவரை நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்று அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வரவேற்பு: இதனிடையே, மாநில மருத்துவ கவுன்சிலை புதிதாக மாற்றியமைத்ததற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவா் டாக்டா் கே.செந்தில் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com