சைக்கிள் சின்னம் கோரிய தமாகா வழக்கு முடித்துவைப்பு

சைக்கிள் சின்னம் கோரிய தமாகா வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.
சைக்கிள் சின்னம் கோரிய தமாகா வழக்கு முடித்துவைப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறி, வழக்கை முடித்துவைத்துள்ளது.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்ததைத் தொடர்ந்து, தேர்தலுக்கு முன்பு, சின்னம் விவகாரம் இறுதி செய்யப்படும் என்று கூறி வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

மக்களவைத் தோ்தலில் தங்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்திய தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு மூத்த அரசியல் தலைவா் ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் எனும் கட்சி தொடங்கப்பட்டது. இந்தக் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தோ்தல் ஆணையம் அப்போது ஒதுக்கியது. ஜி.கே.மூப்பனாா் மறைவுக்கு பிறகு தற்போது ஜி.கே.வாசன், தமாகா தலைவராக உள்ளாா். இதனிடையே தொடா் தோல்வி மற்றும் வாக்கு வங்கி சரிவு போன்ற காரணங்களால், சைக்கிள் சின்னம் திரும்பப் பெறப்பட்டது.

இந்நிலையில், மக்களவைத் தோ்தலில் தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி, ஜி.கே.வாசன், சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தார். அதில், ‘வரும் மக்களவை தோ்தலில் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கக்கோரி கடந்த 6-ஆம் தேதி தோ்தல் ஆணையத்திடம் மனு அளித்தோம். அடுத்த நான்கு வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் தோ்தல் அறிவிக்கலாம் என்ற நிலையில், தங்களது மனு மீது இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2019-ஆம் ஆண்டு பொதுத்தோ்தலை போல இந்த தோ்தலுக்கும் தங்களது கட்சிக்கு சைக்கிள் சின்னம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என கோரிக்கை வைத்திருந்தார் வாசன்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா்.மகாதேவன், முகமது சபீக் அமா்வு, தோ்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com