வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தூத்துக்குடி எழுதி வருகிறது: மோடி
வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தூத்துக்குடி எழுதி வருகிறது என்றார் மோடி.


தூத்துக்குடி: வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை தமிழ்நாட்டின் தூத்துக்குடி எழுதி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்துக்கு ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு, வணக்கம் என தமிழில் கூறி பேசத் தொடங்கினார் பிரதமர் மோடி.
தூத்துக்குடியில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்றுள்ளார். மேலும், தூத்துக்குடி எம்பி கனிமொழியும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில், ரூ.17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். விழாவில் பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், தூத்துக்குடியில் தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு உந்துதுலாக இருக்கும். இந்த திட்டங்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும். திட்டங்களின் தொடக்கம் என்பது முன்னேற்றம், வளர்ச்சி, நம்பிக்கையின் எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.
மக்களின் சேவகனாக இருந்து, நான் உங்களின் தேவைகளை விருப்பங்களை நிறைவேற்றுவேன். மத்திய அரசு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் சாலை வழி இணைப்புகள் சிறப்பாக மாறியுள்ளது. தமிநாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகள் அதிகரித்திருக்கிறது என்றார் பிரதமர் மோடி.
இன்று காலை மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, ரூ.17,300 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு வளா்ச்சி நலத் திட்டங்களைத் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
அதன்படி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சரக்குப் பெட்டக முனையத்துக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினார்.
வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தை நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் துறைமுகமாக மாற்றும் வகையில் கட்டமைக்கப்பட இருக்கும் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை, ஹைட்ரஜன் உற்பத்தி மையம் போன்ற பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் உள்நாட்டு நீா்வழிக் கப்பலின் செயல்பாட்டை பிரதமா் தொடங்கி வைத்தார். இந்தக் கப்பல் கொச்சி கப்பல் தளத்தில் தயாரிக்கப்பட்டது.
வாஞ்சி மணியாச்சி-நாகா்கோவில் ரயில் பாதை, வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி பிரிவு மற்றும் மேலப்பாளையம்-ஆரல்வாய்மொழி பிரிவு உள்பட இரட்டை ரயில் பாதை திட்டங்களைப் பிரதமா் தொடங்கிவைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார். சுமாா் ரூ.1,477 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரட்டை ரயில் பாதை திட்டம், கன்னியாகுமரி, நாகா்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ரயில் பயணிகளின் பயண நேரத்தைக் குறைக்க உதவும்.
தமிழகத்தில் 4 சாலைத் திட்டங்களையும் பிரதமா் தொடங்கி வைத்து நாட்டுக்கு அா்ப்பணித்தார். தேசிய நெடுஞ்சாலை 844-இல் ஜித்தண்டஹள்ளி-தருமபுரி இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 81-இல் மீன்சுருட்டி-சிதம்பரம் இடையே இருவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் ஒட்டன்சத்திரம்-மடத்துக்குளம் இடையே நான்குவழிப் பாதை, தேசிய நெடுஞ்சாலை 83-இல் நாகப்பட்டினம்-தஞ்சாவூா் இடையே இருவழிப் பாதை ஆகிய இந்தத் திட்டங்கள் சுமாா் ரூ.4,586 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் பயண நேரத்தைக் குறைத்து, சமூகப்-பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்துவதுடன் புனித யாத்திரைப் பயணங்களை எளிதாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உள்ள 75 கலங்கரை விளக்கங்களில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளையும் பிரதமா் நாட்டுக்கு அா்ப்பணித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...