பென்னாகரம் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு!

பென்னாகரம் வன சரகத்தில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது.
பென்னாகரம் வனப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானை
பென்னாகரம் வனப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானை

பென்னாகரம் வன சரகத்தில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த ஆண் யானை உயிரிழந்தது.

கர்நாடக மாநில வனப்பகுதிகளில் வறட்சி நிலவும்போது யானைக் கூட்டங்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப்பகுதிக்கு வருகின்றனர். தற்போது ஒகேனக்கல் வனப்பகுதியில் இடம்பெயர்ந்த யானைக் கூட்டங்களிலிருந்து  யானைகள் பிரிந்து அவ்வப்போது பென்னாகரம் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமப் பகுதிக்குள் நுழைகின்றன. 

கடந்த சில நாள்களாக ஒகேனக்கல் வனப்பகுதியில் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி சுற்றித்திரிந்த ஒற்றை ஆண் யானை, பென்னாகரம் வன சரகத்திற்கு உட்பட்ட பேவனூர் காப்புக்காடு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. வனப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்ட பென்னாகரம் வனத்துறையினர் ஒற்றை யானையைக் கண்டுள்ளனர். யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த வனத்துறையினர், திங்கள்கிழமை காலை பேவனூர் காப்புக்காடு பகுதிக்கு உட்பட்ட ஐநூறுகுட்டை பகுதியில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி ஓடையில் கீழே விழுந்துள்ளது. 

இதனைக் கண்ட வனத்துறையினர், ஓசூர் மண்டல உதவி கால்நடை மருத்துவர் பிரகாஷ் உதவியுடன், வன சரக அலுவலர்கள் செந்தில்குமார் (பென்னாகரம்), ராஜ்குமார் (ஒகேனக்கல்), வனவர்கள் புகழேந்திரன், சக்திவேல், ரகுராமன் உள்ளிட்டோர் அடங்கிய வனக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வனப்பகுதியில் சிகிச்சையளித்து வந்த ஒற்றை ஆண் யானை உயிரிழந்தது. 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட வன அலுவலர் கே.வி.அப்பால நாயுடு நிகழ்விடத்திற்கு வந்து இறந்த 40 வயது மதிக்கத்தக்க ஒற்றை ஆண் யானையைப் பார்வையிட்டு, யானைக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், யானையின் இறப்பு குறித்துக் கேட்டறிந்தார். பின்னர் இறந்த ஒற்றை யானை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு வனப்பகுதியிலேயே புதைக்கப்பட்டது. மேலும் ஆண் யானையின் இரண்டு தந்தங்களும் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com