

கோவை: கோவையில் மாடுகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு மேலே விழுந்ததில் மாவட்ட பாஜக நிர்வாகி படுகாயம் அடைந்தார்.
கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம் அடுத்துள்ள ஆறுமுகக் கவுண்டர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம். இவர் கோவை மாவட்ட பாஜகவில் ஊடகப் பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை இவரும் இவரது மனைவி தேவி மோகனாவும் செட்டி வீதி பகுதிக்கு மளிகைப் பொருள்கள் வாங்குவதற்காக சென்றுள்ளனர்.
சிவானந்தம் சாலையோரத்தில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு தனது உறவினர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அருகில் சண்டையிட்டுக் கொண்டிருந்த மாடுகளில் ஒன்று இவரது வாகனத்தின் மீது விழுந்துள்ளது.
இதில், மாடு மற்றும் வண்டியின் பாரம் அழுத்தியதால் காரணமாக, சிவானந்தத்தின் இடது நெஞ்சகப் பகுதியில் எலும்பு முறிவும், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மூளையில் ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க | அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரிய மனு தள்ளுபடி
இது தொடர்பாக சிவானந்தம் மனைவி தேவி மோகனா செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
கோவை மாநகர வீதிகளில் இதுபோல மக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னையிலும் சாலையில் சுற்றி திரியும் மாடுகள் காரணமாக ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், கோவையிலும் அது போன்ற சம்பவம் நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே பாதிக்கப்பட்டுள்ள சிவானந்தத்தின் மனைவி, தனது கணவரின் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.