இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.: முதல்வர் மு.க. ஸ்டாலின்

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க. தான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க. தான் என்பதை அம்பலப்படுத்துவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (25-01-2024) சென்னை செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ‘மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்’ பொதுக்கூட்டத்தில் உரை ஆற்றினார்.

பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்த குடி”யாம் தமிழ்நிலத்தில் இந்தி மொழி ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து - 'இருப்பது ஒரு உயிர், அது போகப் போவது ஒருமுறை, அது இந்த நாட்டுக்காக மொழிக்காக போகட்டுமே!” என்று தமிழ் காக்க உயிரையும் விலையாய்க் கொடுத்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், இந்த நாள்!

இந்தியாவை ஆளும் பா.ஜ.க. அரசானது இந்திமொழியைத் திணிப்பதற்குக் காரணம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றுவதற்குத்தான். பா.ஜ.க.வுக்கு அதிகம் வாக்களிப்பது யார்? வடமாநில மக்கள்! குறைந்தபட்சம், இந்தி பேசும் வடமாநில மக்களுக்காவது எந்த நன்மையாவது செய்திருக்கிறார்களா?

கரோனா காலத்தில் திடீர் என்று ஊரடங்கு போடப்பட்டதால் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்குக் கூட இந்தி பேசும் மக்களுக்குப் பேருந்து வசதியை ஏற்படுத்தித் தராமல், பல நூறு கிலோ மீட்டர் தூரம் மக்கள் நடந்து தங்களின் ஊருக்குப் போன கொடுமையைப் பார்த்து நாம் கண்ணீர் விட்டோம். பலர் தண்டவாளத்தில் நசுங்கி இறந்தார்கள். அப்படி என்றால், கரோனாவை விடக் கொடியவர்கள் யார் என்றால் பா.ஜ.க. அரசுதான். சாரை சாரையாக நடந்து சென்ற இந்தி மக்களுக்கு நீங்கள் காட்டிய இரக்கம் இதுதானா? அந்த மக்களை, இப்போது ராமர் கோயிலைக் காண்பித்து திசைதிருப்பப் பார்க்கிறார்கள்.

லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற சேலம் இளைஞர் அணி மாநாட்டில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதில் மிக முக்கியமான தீர்மானம் - ''இந்துக்களின் உண்மையான எதிரி பா.ஜ.க.தான் என்பதை அம்பலப்படுத்துவோம்'' என்பது! இந்தப் பரப்புரையை எல்லோரும் செய்தாக வேண்டும். இது இளைஞரணியினருக்கான உறுதிமொழி மட்டுமல்ல, எல்லோரின் உறுதிமொழியாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மதத்தைக் கையில் எடுக்கிறது. நாம் இந்தியாவைக் காக்க பா.ஜ.க.வின் தோல்விகளை, அவர்களின் தமிழ்மொழி விரோதப் போக்கை அம்பலப்படுத்துவோம்.

இந்தியா கூட்டணியின் வெற்றியில்தான் இந்தியாவின் எதிர்காலமே இருக்கிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி உண்மையான கூட்டாட்சியாக அமையும்" என்று பேசினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com