தொகுதிப் பட்டியலைத் தயாரிக்கவில்லை: காங். விளக்கம்

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடுக்கான பட்டியலை இன்னும் தயாரிக்கவில்லை என காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.
காங்கிரஸ் கொடி
காங்கிரஸ் கொடி

மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்திருந்தது. 

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, திமுக சாா்பில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவானது காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணியளவில் இக்கூட்டம் துவங்கியது. பேச்சுவாா்த்தையில் காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் கலந்துகொண்டுள்ளனர்

இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. அப்பட்டியலில் எந்ததெந்த தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது எந்தப் பட்டியலையும் தயாரிக்கவில்லை என்றும் திமுகவிடம் தொகுதிப் பட்டியலைக் கொடுப்பதாக வெளியான தகவல்கள் தவறானவை என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com