திமுகவிடம் 21 தொகுதிகளைக் கேட்கும் காங்கிரஸ்!

திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறவுள்ளது.
தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், அதற்கான ஆயத்தப் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சு நடத்துவதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழுவை திமுகவும், மதிமுகவும் ஏற்கெனவே அறிவித்த நிலையில் அதிமுகவும் தொகுதிப் பங்கீட்டு குழுவை அறிவித்திருந்தது. 

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்காக கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக, திமுக சாா்பில் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, முதன்மைச் செயலா் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலா்கள் ஐ.பெரியசாமி, ஆ.ராசா, கடலூா் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்தக் குழுவானது காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடா்பாக இன்று மாலை பேச்சு நடத்த உள்ளது. திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் நடைபெறவுள்ளது. பேச்சுவாா்த்தையின்போது காங்கிரஸ் சாா்பில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குா்ஷித், தமிழகப் பொறுப்பாளா் அஜோய் குமாா் மற்றும் மாநிலப் பொறுப்பாளா்கள் இடம்பெறுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் போட்டியிட விரும்பும் 21 தொகுதிகளைக் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளது. கடந்த முறை வென்ற கரூர், ஆரணி, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், திருச்சி, சிவகங்கை, தேனி, கன்யாகுமரி, விருதுநகர் தொகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மேலும் சில புதிய  தொகுதிகளைத் திமுகவிடம் கேட்க உள்ளனர். இதில், புதிதாக தஞ்சாவூர், திருநெல்வேலி,  ராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, திண்டுக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, காஞ்சிபுரம், தென் சென்னை, அரக்கோணம்  ஆகிய தொகுதிகளைப் பட்டியலில் இணைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com