ஜல்லிக்கட்டு நடப்பதற்கு மோடிதான் காரணம்: அண்ணாமலை பேட்டி

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 
ஜல்லிக்கட்டு நடப்பதற்கு மோடிதான் காரணம்: அண்ணாமலை பேட்டி
Published on
Updated on
2 min read


கோவை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

கோவை வெள்ளலூர் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள்,காளைகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடைபெற மோடிதான் காரணம். ஆனால் கருணாநிதி பெயரில் ஏறுதழுவுதல் மைதானத்தை திறந்து வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியபோது நிறைய பொய்களை பேசியுள்ளார். 

ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகள் நடக்க காரணம் மோடி தான்.2006 -ஆம் ஆண்டு ரேக்ளா போட்டிக்கு தான் முதலில் தடை விதிக்கப்பட்டது.
ஜெய்ராம் ரமேஷ் ஜல்லிக்கட்டை காட்டு மிரண்டி விளையாட்டு என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் காட்சிபடுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளையை சேர்த்தார்கள். அதனால் ஜல்லிக்கட்டு,ரேக்ளா உள்ளிட்டவை தடை செய்யப்பட்டது.இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்தவர் ஸ்டாலின்.காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையில் இருந்து காளையை நீக்கியது பாஜக அரசுதான்.மத்திய பாஜக அரசு ஆதரவால் தான் ஜல்லிக்கட்டு உள்ளிட்டவை மீதான தடை நீங்கியது.

2024 மக்களவைத் தேர்தலில் மோடி கரங்களை வலுப்படுத்த மாற்று கட்சியினர் பாஜகவில் இணைந்துள்ளனர் .முரண்பாடு இல்லாதவர்கள் ஒரு கூட்டணியில் இருக்கிறார்கள்.இந்தியா கூட்டணியில் மேற்கு வங்கம், பஞ்சாப், ஹரியாணாவில் பிரச்னை உள்ளது.இந்தியா கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட பிரச்னையே நிதிஷ்குமார் வெளியேற காரணம்.இந்தியா கூட்டணி உருவாவதற்கும்,மற்ற கட்சிகளை சேர்க்கவும் காரணமான நிதிஷ்குமாரே அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டார். இது பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்பதை காட்டுகிறது.மோடி எதிர்ப்பு என்ற ஒரே அஜெண்டாவை தவிர வேறு எந்த கொள்கையும் இந்தியா கூட்டணிக்கு இல்லை.

தமிழக அரசு செயல் இழந்துள்ளது
திமுக தேர்தல் அறிக்கையில் 3.50 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் இரண்டரை ஆண்டுகளில் 10,321 பேருக்கு தான் வேலை தந்துள்ளார்கள்.கிராமப் பகுதிகளில் 50 சதவிகித காவலர்கள் பற்றாக்குறை உள்ளது.கிராமப் பகுதிகளில் வழிப்பறி,கொலைகள் அதிகமாக நடக்கிறது.பல்லடத்தில் செய்தியாளர் மீதான தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது.முதல்வர் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு செயல் இழந்துள்ளது. திமுக தீய சக்தியை அழிக்கும் குறிக்கோளோடு வேலை செய்கிறேன்.நாட்டில் அதிகமாக வெளிநாடு செல்லும் செல்லும் முதல்வர் ஸ்டாலின் தான்.அவர் எதற்காக வெளிநாடு செல்கிறார் என்ற உண்மையை சொல்ல வேண்டும்.

அரசியல் வியாபாரி
திருமாவளவன் என்னை ஆட்டு குட்டி என்றது எனக்கு பெருமை தான். மத்திய அமைச்சரவையில் 76 அமைச்சர்களில் 12 அமைச்சர் பட்டியலினத்தவர். அதுவே தமிழகத்தில் 35 பேரில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள்.அதனால் ஸ்டாலினை கண்டிக்கிறோம் என திருமாவளவன் தீர்மானம் போட்டிருக்க வேண்டும்.திருமாவளவன் போட்ட தீர்மானங்கள் எல்லாம் பச்சை பொய்.2, 3 சீட்டுக்காக நாடகம் போட்டுள்ளார்.தமிழகத்தில் அதிகயளவில் வன்கொடுமை வழக்குகள் பதிவாவது பற்றியெல்லாம் பேசாத திருமாவளவனுக்கு சமூகநீதி பற்றி பேச தகுதியில்லை.அவர் ஒரு அரசியல் வியாபாரி.

இபிஎஸ்-க்கு தெரியாது
நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும், அயோத்தி குழந்தை ராமர் கோயில் சிறப்பு வாய்ந்தது.இது அயோத்தி ராமர் பற்றி ஆன்மிகம் தெரிந்தவர்களுக்கு புரியும். ஆன்மிகம் தெரிந்த மாதிரி பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு புரியாது என அண்ணாமலை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.