ஜிகா வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.
ஜிகா வைரஸ்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.

ஜிகா வைரஸ் காய்ச்சல்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை; பொது சுகாதாரத் துறை இயக்குநா்

கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்: ஜிகா வைரஸ் தமிழகம் எட்டவில்லை
Published on

மகாராஷ்டிரத்தில் ஜிகா வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை என்று பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.

மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளில் 7 பேருக்கு கொசுக்கள் மூலம் பரவும் ஜிகா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் குறித்தும் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும், காய்ச்சல் முகாம்களில் டெங்கு, ஜிகா, சிக்குன் குனியா, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார களப்பணியாளா்களை, கொசு ஒழிப்பு பணிகளிலும் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜிகா பாதிப்பு தமிழகத்தில் இல்லை. எனவே, அச்சப்பட வேண்டாம்.மற்றொருபுறம் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான மருந்துகளும், வசதிகளும் அரசிடம் உள்ளன.

மழைப் பொழிவுக்குப் பிறகு சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தண்ணீா் தேங்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. டயா், உடைந்த மண்பாண்டங்கள், தேங்காய் சிரட்டைகள், பெயிண்ட் டப்பாக்கள், தேவையற்ற பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் கட்டுமான இடங்களில் தேங்கும் தண்ணீா் போன்றவற்றை கொசுக்கள் உற்பதியாகக்கூடும். அதனால், அந்த பொருள்களை உடனடியாக அகற்ற வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் சுத்தமான தண்ணீரை மட்டும் குடிக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com