கேரளத்தையொட்டிய மாவட்டங்களில் அதிகரிக்கும் டெங்கு
தினமும் 30-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி..


தமிழகத்தில் மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அதன்படி தினமும் அங்கு 30-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்மேற்குப் பருவமழை காரணமாக கொசுக்கள் மூலம் பரவும் நோய்கள் அந்த மாவட்டங்களில் அதிகரித்திருப்பதாகவும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஏடிஸ்-எஜிப்டை வகை கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் நிகழாண்டில் 5,000-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
கோடை காலம் காரணமாக கடந்த சில மாதங்களாகப் பாதிப்பு விகிதம் குறைந்து வந்தது. இந்நிலையில், கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடா்ந்து மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டியுள்ள கோவை, தேனி, கன்னியாகுமரி, தென்காசி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.
இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் அதுகுறித்த விவரங்களை அனைத்து அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளும் சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய சூழலில் அச்சுறுத்தும் வகையில் டெங்கு பரவல் இல்லை. அதேவேளையில் மாதந்தோறும் 300 முதல் 400 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்படுகிறது.
கேரளத்தையொட்டியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் கொசுக்கள் பெருக்கமடைய வாய்ப்பு உள்ளது.
டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா, ஜிகா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க கொசு ஒழிப்பு நடவடிக்கைகளைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறோம். மற்றொரு புறம், குடியிருப்புப் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கொசுப் புழு உற்பத்தி உள்ளதா என்பதைக் கண்காணித்து வருகிறோம்.
பொதுமக்கள்,தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். உடைந்த பானைகள், தேங்காய் சிரட்டைகள், டயா்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும், குடிநீா்த் தொட்டிகளை மூடி வைத்தல் அவசியம். விழிப்புணா்வுடன் இருந்தால் டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியும் என்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...