தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள்... 1977 வழக்குகள்: செல்வப்பெருந்தகை

கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார்? என்று செல்வப்பெருந்தகை கேள்வி.
செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
Published on
Updated on
1 min read

தமிழக பாஜகவில் 261 குற்றவாளிகள் இருப்பதாகவும், அவர்கள் மீது 1977 வழக்குகள் உள்ளதாகவும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சென்னையில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுச் சென்று பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றப் பின்னணி உடையவர் என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது:

”சாவு வீட்டில் என்ன பேச வேண்டும் என்பது அண்ணாமலைக்கு தெரியவில்லை. ஆருத்ரா குறித்து நான் எழுப்பிய கேள்வியை அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டவுடன் கோபத்துடன் என்னை ரெளடி பட்டியலில் உள்ளவர் என்று தெரிவித்துள்ளார். தலித் மீது அவதூறு தெரிவித்தால் சிறை தண்டனை கிடைக்கும் என்பது அண்ணாமலைக்கு தெரியாதா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாங்கள் யாரையும் குற்றவாளிகள் என்று தெரிவிக்கவில்லை. ஆருத்ராவுக்கு தொடர்பு இருப்பதாக மக்கள் மத்தியில் பேசி வருவதால், அதுகுறித்தும் விசாரிக்க கோரினோம். ஸ்காட்லாந்து போலீஸுக்கு இணையானது தமிழ்நாடு காவல்துறை என்று ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற முன்னாள் முதல்வர்களே புகழ்ந்துள்ளனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போனதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துக் கொண்டேவுள்ளார். குற்றப் பட்டியலில் உள்ள 261 பேரை பாஜக தலைவர்களாக நியமித்துள்ளீர்கள். அவர்கள் மீது 1977 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

செல்வப்பெருந்தகை
ஆம்ஸ்ட்ராங் கொலை: பா.இரஞ்சித் பதிவும், எதிர்வினைகளும்!

கர்நாடகத்தில் அண்ணாமலை என்ன வேலை செய்து கொண்டிருந்தார். எழுத்தாளர்கள் உள்பட பல கொலைகள் நடந்தது குறித்து அடுத்ததாக கர்நாடக அரசிடம் அறிக்கை கேட்கவுள்ளேன். அண்ணாமலை எதற்காக தீடீரென ராஜிநாமா செய்தார் என்பதை ஆராய வேண்டும்.

அண்ணாமலையை தொடர்ந்து மன்னித்து வருகிறோம். ஆனால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். துக்க வீட்டில் போனால் என்ன பேசவேண்டும், திருமண வீட்டில் என்ன பேச வேண்டும் எனத் தெரியவில்லை. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி பற்றி பேசும் அண்ணாமலை, இந்திரா காந்தியை துர்கா தேவி என்று வாஜ்பாய் புகழ்ந்ததை ஏன் பேசவில்லை. மருத்துவத்துக்காக என்னை அமெரிக்கா அனுப்பியதற்கு ராஜிவ் காந்திக்கு, வாஜ்பாய் நன்றி தெரிவித்த வரலாறை ஏன் பேசவில்லை?

என்னை குற்றப் பின்னணி கொண்டவர் என்று பேசிய அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கோர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com