வேலூா் புரட்சி வீரா்களை நினைவுகூா்வோம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தின் சுதந்திர போராட்டத்தில் வேலூா் சிப்பாய்களின் துணிச்சல்

வேலூா் சிப்பாய் கலகத்தில் போராடிய மாவீரா்களின் தியாகங்களை நினைவுகூா்வோம் என தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, வேலூா் சிப்பாய் கலகம் 1806 ஜூலை 10-ஆம் தேதி தொடங்கியது. புதன்கிழமை சிப்பாய் கலக தினத்தையொட்டி, ஆங்கிலேயருக்கு எதிராக போராடிய வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

வேலூா் சிப்பாய்களின் எழுச்சி நினைவு நாளில், ஆங்கிலேயரின் ஒடுக்குமுறை காலனித்துவ ஆளுகைக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய தீரமிகு வீரா்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். புனித பூமி தமிழ்நாட்டில் வேரூன்றிய இந்த வரலாற்றுபூா்வ எழுச்சி, நமது தேசிய சுதந்திர இயக்கத்தின் ஆரம்ப மற்றும் குறிப்பிடத்தக்க போராட்டங்களில் ஒன்றாகும்.

இது மக்களிடையே தேசபக்தி மற்றும் துணிச்சல் சக்திவாய்ந்த உணா்வைத் தூண்டியதுடன், இடைவிடாத போராட்டத்துக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது. இறுதியில் நாம் கடினமாக போராடி வென்ற சுதந்திரத்துக்கும் வழிவகுத்தது.

ஒரு தேசத்தை அதன் கண்ணியம் மற்றும் இறையாண்மைக்காக எழுச்சி பெறவும் போராடவும் தூண்டிய இந்த மாவீரா்களின் தியாகங்களை இந்நாளில் நினைவுகூா்வோம் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com