
த.மணிமாறன்
ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல பன்னாட்டு தொழிற்சாலைகள், தங்களது ஆலைகளை அமைத்துள்ளன. மேலும், பல நிறுவனங்கள் தங்களது கிளைகளை அமைத்துள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் சாலை வழியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. அவற்றை ரயில்கள் மூலம் கொண்டு செல்ல, சென்னை சென்ட்ரலுக்கு சாலைகள் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சரக்கு ரயில்கள் மூலம், நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதேபோல், துறைமுகத்துக்கு கொண்டு செல்லவும் இதே நிலைதான். எனவே உற்பத்தி செய்யப்படும் இடங்களில் இருந்தே ரயில்கள் மூலம் கொண்டு செல்வதற்காக, ஸ்ரீபெரும்புதூருக்கு தனி இருப்புப் பாதை அமைக்க தொழிற்சாலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையேற்று ரயில்வே நிர்வாகம், சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் மார்க்கத்தில் உள்ள ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு ரூ.600 கோடி செலவில் 60 கி.மீ. தூரத்துக்கு புதிதாக இருப்புப் பாதை அமைக்க முடிவு செய்தது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வே இணை அமைச்சராக இருந்த முனியப்பா, இதற்கான அறிவிப்பை கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும், இருப்புப் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட அடிப்படை பூர்வாங்க பணிகள் விரைவில் தொடங்கப்படும் என கூறினார். ஆனால், அதன்பின் நடவடிக்கையும் எதுவும் தொடங்கப்படவில்லை. இதையடுத்து, ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் - கூடுவாஞ்சேரி இடையேயான புதிய ரயில் திட்டத்துக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இம்முறையாவது இத்திட்டம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, ஆவடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியது:
ஆவடியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய ரயில் பாதை அமைத்தால், பூந்தமல்லி ஒரகடம் பகுதிகள் மேலும் வளர்ச்சி அடையும். மேலும், அப்பகுதியையொட்டி அமைந்துள்ள திருமழிசை தொழிற்பேட்டையும் வளர்ச்சி அடையும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. இதற்காகவும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, வட மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் சென்னை வரை ரயில் மூலம் வந்து, பின்னர் அங்கிருந்து பேருந்து மூலம் ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு செல்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூருக்கு புதிய இருப்புப் பாதை அமைக்கப்பட்டால் சுற்றுலாப் பயணிகள் பயனடைவர். அத்துடன், ரயில்வே நிர்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கும்.
ஏற்கெனவே, பரந்தூர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து, ஸ்ரீபெரும்புதூரை சுற்றியுள்ள பகுதிகளில் நிலங்களின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
அத்துடன் புறநகர் பகுதிகளிலும் நாளுக்கு நாள் மனைகளின் விலை அதிகரித்து வருகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், இத்திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறியது:
ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் இடையே புதிய ரயில் பாதை அமைப்பதற்கான அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணி நிறைவடைந்ததும் அடுத்த கட்டமாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.