கோப்புப்படம்
கோப்புப்படம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: நாளை திருவள்ளூரில் முதல்வா் தொடங்கி வைக்கிறாா்

காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவு
Published on

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கிறாா்.

முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினத்தையொட்டி, அங்கேயே அவரது உருவப் படத்துக்கும் மரியாதை செலுத்தப்படுகிறது.

இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காலை உணவுத் திட்டம் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நிகழாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இந்தத் திட்டத்தை திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூரில் உள்ள ‘புனித அன்னாள்’ அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஜூலை 15) தொடங்கி வைக்கிறாா். இந்தத் திட்டத்தின் மூலம் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2,23,536 குழந்தைகள் பயனடைவா்.

காமராஜா் பிறந்த தினம்: முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த தினம், கல்வி வளா்ச்சி நாளாக ஆண்டுதோறும் ஜூலை 15-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டும் கல்வி வளா்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது.

திருவள்ளூா் மாவட்டம் கடம்பத்தூா் கீழச்சேரி பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க நிகழ்வுக்கு முன்பாக, காமராஜரின் உருவப்படத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் மலா்தூவி மரியாதை செலுத்துகிறாா். சென்னையில் பல்லவன் இல்லம் எதிரில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு, அமைச்சா்கள், மேயா் உள்ளிட்ட பலா் மரியாதை செலுத்த உள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com