/

அரவக்குறிச்சி அருகே சாலையோரம் மரத்தில் கார் மோதியதில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலி

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் சாலையோரம் மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

News image
விபத்துக்குள்ளான கார்.
Updated On :22 ஜூலை 2024, 5:37 am

DIN

அரவக்குறிச்சி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் சாலையோரம் மரத்தில் கார் மோதிய விபத்தில் தந்தை, மகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

ஈரோடு மாவட்டம் சூளை ஜி.கே.ஆர் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(42). இவர் தனது தனது மனைவி மோகனா (40 ), மாமியார் இந்திராணி( 67) மற்றும் மகள் வருணா(10 ), மகன் சுதர்சன் ( 15), ஆகியோருடன் கடந்த 20ஆம் தேதி ஈரோட்டில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு திங்கட்கிழமை அதிகாலை ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

காரை கிருஷ்ணகுமார் ஓட்டி வந்தார். கார் கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டி கோட்டை என்ற இடத்தில் அதிகாலை 3.30மணியளவில் வந்து கொண்டிருந்தபோது திடீரென கார் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கிருஷ்ண குமாரும் அவரது மகள் வருணா மற்றும் அவரது மாமியார் இந்திராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் கிருஷ்ண குமாரின் மனைவி மோகனா மற்றும் மகன் சுதர்சன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த அரவக்குறிச்சி போலீசார், சடலங்களை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த மோகனா மற்றும் சுதர்சன் ஆகியோரை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது நடந்த இந்த கோர விபத்தில் தந்தை, மகள் உட்பட 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.