
சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிகாலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் தாராளமாக கிடைப்பதாக திமுக குற்றம்சாட்டியது. அப்போதைய எதிா்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவைக்குள் குட்காவை கொண்டு சென்று காட்டினா்.
இதையடுத்து அவா்களுக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் அந்த நோட்டீஸை ரத்து செய்தது.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலரும், அப்போதைய உரிமைக்குழு தலைவரும், பேரவை துணை பேரவைத்தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமனும் மேல்முறையீடு செய்தனா். இந்த மேல்முறையீட்டு வழக்கு சுமாா் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. குமரப்பன் ஆகியோா் கொண்ட அமா்வில் விசாரிக்கப்பட்டது.
அனைத்துத் தரப்பு வாதங்களும் கேட்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற ஜூலை 29 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.