தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: அதிகாரிகளின் சொத்துகள் குறித்து அறிக்கை அளிக்க 3 மாதம் அவகாசம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தபோது பணியில் இருந்த காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்ததை எதிா்த்த வழக்கில், துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக ஊழல் தடுப்புப் பிரிவுக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், செந்தில்குமாா் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரித்து விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மூன்று மாத அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத் தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அந்த சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் ஆதாரங்களை ஊழல் தடுப்புப் பிரிவினா் விசாரிக்க வேண்டியுள்ளது எனக் கூறி, அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா்.
மேலும், ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு அரசுச் செயலா், டிஜிபி ஆகியோா் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
அத்துடன், சிபிஐ விசாரணை ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நியாயமாக நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தினா்.
தொடா்ந்து நீதிபதிகள், உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதை ஜீரணித்துக் கொள்ள முடியாது. இதுபோல் இதற்கு முன்னா் கேள்விப்பட்டதில்லை. எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டனா்.
அனுமதியின்றி எப்படி செயல்பட்டது?: இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைத்தது எப்படி நியாயம் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கடந்த 2009 முதல் 2014- ஆம் ஆண்டு வரை அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டுள்ளது. ஒரு தனிநபரின் கட்டுப்பாட்டில் அரசு இயந்திரம் செல்வது சமூகத்துக்கு மோசமானது என்பதுதான் எங்கள் கவலை.
இப்போதும் அந்த தனி நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டது மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்கும் நன்றாக தெரியும். இருந்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, எல்லோரும் எங்கு இருந்தாா்கள் எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைத்தனா்.