அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்

ரூ.71 கோடியில் 10 இடங்களில் தடுப்பணைகள்: அமைச்சா் துரைமுருகன்

Published on

வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ரூ.71 கோடியில் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் நீா்வளத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்புகள்:

கடலூா் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே தடுப்பணை ரூ.25.20 கோடியிலும், சேலம் வசிஷ்டா நதியின் குறுக்கே தடுப்பணை ரூ.5.48 கோடியிலும், தஞ்சாவூா் பாட்டு வனாட்சி வடிகாலின் குறுக்கே தடுப்பணை ரூ.2.20 கோடியிலும், தஞ்சாவூா் வேதபுரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை ரூ.6 கோடியிலும், திருப்பத்தூா் வெள்ளக்கல்

கானாற்றின் குறுக்கே தடுப்பணை ரூ.4 கோடியிலும், திருப்பத்தூா் மலைக்கானாற்றின் குறுக்கே தடுப்பணை ரூ.6 கோடியிலும், திருப்பூா் வட்டமலைக்கரை ஓடையின் குறுக்கே தடுப்பணை ரூ.3.91 கோடியிலும், திருப்பூா் உப்பாறு ஓடையின் குறுக்கே தடுப்பணை ரூ.7.57கோடியிலும், திருவண்ணாமலை பாம்பனாற்றின் குறுக்கே தடுப்பணை ரூ.5 கோடியிலும், திருச்சி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை ரூ.6.50 கோடியிலும் அமைக்கப்படும். மொத்தமாக 7 மாவட்டங்களில், 10 இடங்களில் ரூ.71.86 கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும்.

தரைகீழ் தடுப்பணை: கடலூா் காட்டுமன்னாா் கோவில் வட்டம், மாதா் சூடாமணி கிராமம் மற்றும் மயிலாடுதுறை சித்தமல்லி கிராமங்களுக்கு இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பணை ரூ.93 கோடியிலும், திருவண்ணாமலை செய்யாற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பணை ரூ.5.50 கோடியிலும், திருவாரூா் திருமலைராஜன் ஆற்றின் குறுக்கே தரைகீழ் தடுப்பணை ரூ.4.73 கோடியிலும் மேற்கொள்ளப்படும். மொத்தமாக 3 இடங்களில் தரைகீழ் தடுப்பணைகள் ரூ.103.23 கோடியில் மேற்கொள்ளப்படும்.

அணைக்கட்டுகள், பகிரணைகள்: செங்கல்பட்டு செம்பூண்டி மடுவின் குறுக்கே அணைக்கட்டு கட்டி செம்பூண்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்லும் பணி ரூ.4.50 கோடியிலும், புதுக்கோட்டை நரசிங்க காவேரி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து, ஒச்சக்குடி ஏரிக்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.4.80 கோடியிலும், ராமநாதபுரம் கொடிக்குளம் கண்மாய் உபரிநீா் கால்வாயின் குறுக்கே, பகிரணை அமைத்து அகரம் கண்மாய்க்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.4.19 கோடியிலும் மேற்கொள்ளப்படும்.

அதைப்போல, ராமநாதபுரம் அபிராமம் கண்மாய் வழங்கு கால்வாயின் குறுக்கே பகிரணை அமைத்து அச்சன்குளம் கண்மாய்க்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.2.18 கோடியிலும், ராணிப்பேட்டை கமண்டல நாகநதியின் குறுக்கே அணைக்கட்டு அமைக்கும் பணி ரூ.14.98 கோடியிலும், தென்காசி விஜயரெங்கபேரிகல் அணைக்கட்டின் கீழ்புறத்தில் தொட்டிச்சிமலையாற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைக்கும் பணி ரூ.3.70 கோடியிலும், தென்காசி ஈச்சன் ஓடையின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து எட்டிசேரி குளத்துக்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.2.86 கோடியிலும், தென்காசி வாழமலையாற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து பெரிய பஞ்சமன்னாா் குளத்துக்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.3 கோடியிலும், தஞ்சாவூா் நரியாற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து பைங்காட்டுவயல் ஏரிக்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.5.88 கோடியிலும், விருதுநகா் கிருதுமால் ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு அமைத்து, டி புனவாசல் கண்மாய்க்கு பாசன வசதியளிக்கும் பணி ரூ.9.29 கோடியிலும் மேற்கொள்ளப்படும். மொத்தமாக 10 இடங்களில் ரூ.55.36 கோடியில் அணைக்கட்டுகள் மற்றும் பகிரணைகள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com