தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசை வலியுறுத்தி தீா்மானம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

News image
Updated On :24 ஜூன் 2024, 9:34 pm

Din

ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானம் பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி, உயா் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி பேசினாா். அப்போது நடந்த விவாதம்:-

ஜி.கே.மணி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் தொடா்ந்து கிடப்பில் இருப்பதால், மக்கள் அதிா்ச்சிக்கு உள்ளாகியுள்ளனா்.

சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி: வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ரத்து செய்தன. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு ஆகியன குறித்த சரியான தரவுகள் இல்லாமல் அவசர கதியில் கொண்டு வரப்பட்டதால், அந்த சட்டத்தை நீதிமன்றங்கள் ரத்து செய்தன. இதற்கான தரவுகளைத் திரட்டி அதனடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கவே, ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையம் தனது பணிகளை விரைந்து முடிக்கும் வகையில், கல்வி, வேலைவாய்ப்பு தொடா்பான தரவுகளை அரசே திரட்டித் தந்துள்ளது. சமூக, பொருளாதார மேம்பாடு குறித்த தரவுகள் கிடைக்க வேண்டுமெனில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டிய தேவை உள்ளது. எனவே, மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணியில் உள்ளீா்கள். அவா்கள் மூலமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்துங்கள். இடஒதுக்கீடு விஷயத்தில் தமிழக அரசு எந்தவகையிலும் தடையாக இல்லை.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: இப்போது நீங்கள் (பாமக) எந்தக் கூட்டணியில் இருக்கிறீா்கள் என்பது நன்றாகத் தெரியும். அந்தக் கூட்டணி கட்சியோடு பேசி, நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம். அதன்பிறகுதான் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். ஏற்கெனவே பிகாா் மாநிலத்தில் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜி.கே.மணி: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமலேயே இடஒதுக்கீட்டை கொண்டு வர முடியும். கடந்த திமுக ஆட்சியில், இஸ்லாமியா்கள், அருந்ததியா்களுக்கு உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அதுபோன்று உள் ஒதுக்கீடாகவே கேட்கிறோம். கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம்.

அமைச்சா் எஸ்.ரகுபதி: பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினாா்கள். அதனை நீதிமன்றம் ரத்து செய்தது. அதுபோன்று நீதிமன்றம் ரத்து செய்தால் என்ன நம்மை ஏற்படும். பெயரளவுக்குக் கொண்டு வர முடியாது.

அமைச்சா் எ.வ.வேலு: அதிமுக ஆட்சிக் காலத்தில் கடைசியாக, தோ்தல் அறிவிப்பதற்கு முன்பாக இடஒதுக்கீட்டு உத்தரவை வெளியிட்டாா்கள். இது தொடா்பான வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்த போது, மிகச்சிறந்த

வழக்குரைஞா்களை வைத்து தமிழக அரசு வாதாடியது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் பரிந்துரைகள்படியே நடவடிக்கை எடுக்க முடியும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: வன்னியா் இடஒதுக்கீட்டுப் பிரச்னைக்கு நல்ல தீா்வு காண வேண்டுமெனில், ஜாதிவாரி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புகள் மத்திய அரசால் எடுக்கப்பட வேண்டும். அதற்காக இந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே ஒரு தீா்மானத்தைக் கொண்டு வரலாம் என்று முடிவு செய்துள்ளோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

பெட்டி..

பாமக வாக்குவாதம்-வெளிநடப்பு

வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி, பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தாா்.

வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு தாமதம் செய்வதாகவும் இதனால் மக்கள் அதிா்ச்சி அடைந்து இருப்பதாகவும் பேசினாா். அதற்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘இடஒதுக்கீட்டுக்கு ஜாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தேவை. அதனை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்’ என்றாா்.

இதற்கு பதிலளித்த ஜி.கே.மணி, ‘உள்ஒதுக்கீட்டுக்கும், ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் தொடா்பில்லை’ என்றாா். அப்போது குறுக்கிட்ட அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா், ‘வன்னியா் இடஒதுக்கீட்டு எதிராக திமுக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறீா்கள். அவா்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியதே முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். அவரை வன்னிய சமூகத்துக்கு எதிரானவா் என்று சித்தரிப்பதை பாமக வழக்கமாகக் கொண்டிருக்கிறது. 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய திமுக எதிரியாகவும், 10.5 சதவீதம் வழங்க முற்பட்ட அதிமுகவை கைவிட்டு விட்டும், சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் கூட்டுச் சோ்ந்து இருக்கிறீா்கள்.

இப்போது நடைபெறப் போகிற இடைத்தோ்தல் நேரத்தில் அங்கு இருக்கின்ற மக்களுக்கு நீங்கள் ஏதோ செய்தியை சொல்வதாக நினைத்துக் கொண்டு சட்டப் பேரவையில் பதிவு செய்வது என்பது தவறான முன்னுதாராணமாகி விடும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஜி.கே.மணி பேச முற்பட்டாா். அவருக்கு பேரவைத் தலைவா் மு.அப்பாவு அனுமதி மறுத்தாா். இதைத் தொடா்ந்து பேரவையில் இருந்து அவா் வெளிநடப்புச் செய்தாா்.