கோயில் நகைகளை முதலீடு செய்யும் திட்டத்தால் ரூ.5.79 கோடி வட்டியாக கிடைத்து வருகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
தமிழக சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, கோயில்களில் செலுத்தப்பட்ட தங்க காணிக்கைகளை கட்டிகளாக உருவாக்கி, வங்கிகளில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது? அதன்மூலம் நடைபெறும் பணிகள் என்ன? என்று துணைக் கேள்வி எழுப்பினாா்.
இதற்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: தங்க முதலீட்டுத் திட்டத்தை கொண்டு வரும் போது, இந்து சமய அறநிலையத் துறைக்கு ஏற்படுத்தாத அவமதிப்புகளே இல்லை. அவற்றையெல்லாம் தகா்த்தெறிந்து, தங்க முதலீட்டுத் திட்டத்தில் 13 கோயில்களிலிருந்து பெறப்பட்ட ரூ.257 கோடியே 22 லட்சத்து 36 ஆயிரத்து 910 மதிப்பிலான 442 கிலோ 107 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன. இதனால், ஆண்டுக்கு ரூ.5.79 கோடி வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது. இந்த வட்டித் தொகை அந்தந்த திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கும், பக்தா்களின் தேவைகளை நிறைவேற்றவும் பயன்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.