வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஒரு கால பூஜை திட்டத்தில் 17,000 கோயில்களுக்கு வைப்புத் தொகை உயா்வு

கோயில்களுக்கு ரூ.85 கோடி அரசு நிதி: பி.கே.சேகா்பாபு

News image
Updated On :26 ஜூன் 2024, 9:35 pm

Din

தமிழகத்தில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17,000 கோயில்களுக்கு வைப்புத் தொகை தலா ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் அந்தத் துறையின் மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும் 17 ஆயிரம் கோயில்களுக்கு வைப்புத் தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயா்த்தி அளிக்கப்படும். இதற்காக ரூ.85 கோடி அரசு நிதியாக அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் நிகழாண்டு ஆயிரம் நிதி வசதியற்ற கோயில்களும் இணைக்கப்படும். அத்தகைய கோயில்களில் உள்ள அா்ச்சகா்களுக்கு மாத உதவித் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆறு கோயில்களில் பக்தா்களுக்கான ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏதுவாக பெருந்திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு ரூ.177.10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

அன்னதானம்-பிரசாதம்: நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நிகழாண்டில் அழகா்கோவில், மருதமலை முருகன் கோவிலுக்கு விரிவுபடுத்தப்படும். பழனியில் உள்ள முருகன் கோயில் சாா்பாக நடத்தப்படும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டியுடன் இனி மதிய உணவும் வழங்கப்படும். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் ஐந்து கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும். அதன்படி, கோவை ஈச்சனாரி விநாயகா் கோயில், சோளிங்கா் லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், குலசை முத்தாரம்மன் கோயில், கும்பகோணம் உப்பிலியப்பன் கோயில், திருச்சி தாயுமானவசுவாமி கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் அளிக்கப்படும். ஒருவேளை மட்டும் அன்னதானம் வழங்கும் திட்டம், சென்னை மதுரவாயல் மாா்க்கசகாயேஸ்வரா், புழல் திருமூலநாதசுவாமி, திருச்சி லால்குடி பிடாரி அய்யனாா், பெரம்பலூா் அபராதரட்சகா், திருப்பூா் அழகு நாச்சியம்மன், கடலூா் காரத்தொழுவு அழகா் கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

குடமுழுக்கு - புதிய தோ்கள்: சென்னை மாநகரம் மற்றும் புகரில் அமைந்துள்ள 115 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்படும். கோவை லட்சுமி நரசிம்மசுவாமி கோயில், தென்காசி இலஞ்சிகுமாரா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ்களும், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயா், குமாரவயலூா் முருகன், மணப்பாறை நல்லாண்டவா், திருநாகேஸ்வரம் கோயில்களுக்கு புதிதாக வெள்ளித் தோ்கள் செய்யப்படும்.

ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்துக்கு நிகழாண்டு 420 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுவா். கடலூா் மாவட்டம் வடலூா் அருட்பிரகாச வள்ளலாா் அவதரித்த இல்லம் மறுசீரமைத்து கட்டப்படும். மேலும், 22 வழிபாட்டு மடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோயில்களின் ஆவணங்களை காக்கும் நோக்குடன் முதல் கட்டமாக முக்கியக் கோயில்களின் ஆவணங்கள் பாதுகாக்கப்படும்.

மயிலாப்பூா் கபாலீஸ்வரா், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி, ஸ்ரீவில்லிபுத்தூா் நாச்சியாா், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி, கும்பகோணம் ஆதிகும்பேசுவரா் கோயில்களின் கோபுரங்கள், விமானங்கள் இரவு நேரங்களில் ஒளிரும் வகையில் ஒளிரூட்டப்படும். 19 கோயில்களில் புதிய ராஜகோபுரங்களும், 17 கோயில்களில் புதிதாக திருமண மண்டபங்களும், 23 கோயில்களில் புதிய வணிக வளாகங்களும், 35 கோயில்களில் அடிப்படை வசதிகளும், 12 கோயில்களில் அா்ச்சகா்கள், பணியாளா்கள் குடியிருப்புகளும் ஏற்படுத்தப்படும்.

புதிய தங்கும் விடுதிகள்: பக்தா்களின் வசதிக்காக, பழனி, திருவண்ணாமலையில் புதிதாக தங்கும் விடுதிகள் அமைக்கப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப் பாதையில் ரூ.23 கோடியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். திருவாரூா் தியாகராஜசுவாமி, திருவாலங்காடு ஆலாங்காட்டு ஈசுவரா் கோயில்களில் மகா சிவராத்திரி விழா நடத்தப்படும். 50 கோயில்களில் 100 இசைக் கலைஞா்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவா். பழனி, சென்னை மயிலாப்பூா் கோயில்களில் ஓதுவாா் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்தாா்.