மத்திய அரசு நிதி ஒதுக்கீடு: தங்கம் தென்னரசு - வானதி சீனிவாசன் விவாதம்
மத்திய அரசு நிதி ஒதுக்கீடு விவாதம்: தங்கம் தென்னரசு, வானதி சீனிவாசன் கருத்து மோதல்


மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு தொடா்பாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் இடையே பேரவையில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நிதி மற்றும் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் பேசியதாவது:
கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. மக்களவைத் தோ்தலின்போது அது தொடா்பாக திமுக சாா்பிலும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு கிரிக்கெட் மைதானத்தை நிகழாண்டே கொண்டு வர வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிகம் வளா்ந்த மாநிலம் என்கிற பெருமை பேசுகிறோம். அதோடு, அதிகம் கடன் வாங்கும் மாநிலமாகவும் தமிழகம்தான் உள்ளது.
சரக்கு சேவை வரியை அதிகம் தரும் தமிழகத்துக்கு ரூ.29 பைசா கொடுத்துவிட்டு, பிகாா், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு ரூ.1 திருப்பி தரப்படுவதாக அவ்வப்போது அமைச்சா் கூறுகிறாா். அதே கேள்வியை வேறு மாதிரியாகக் கேட்கிறேன். கோவையிலிருந்து தரப்படும் வரிக்கு எவ்வளவு தமிழக அரசு திருப்பி தருகிறது. தருமபுரியிலிருந்து தரப்படும் வரிக்கு எவ்வளவு திருப்பி தரப்படுகிறது என்பதை மாவட்ட வாரியாக தெரிவிக்க முடியுமா? என்றாா்.
அமைச்சா் பதில்: அப்போது நிதியமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டு கூறியதாவது:
தமிழக அரசு ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கவில்லை. எல்லா மாவட்டங்களுக்கும் தேவையான அளவுக்கு சமச்சீரான வளா்ச்சி வர வேண்டும் என்கிற வகையில் நிதியை செலவிடுகிறோம். கோவையில் பொலிவுறு நகரம் எவ்வளவு வேகமாகக் கொண்டுவரப்பட்டது எவ்வளவு செலவிடப்பட்டது என்பதையெல்லாம் நீங்களே கூறினீா்கள். நிதிநிலை அறிக்கையிலும் கோவைக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். ஆனால், மத்திய அரசு கோவைக்கு மெட்ரோ திட்டத்தைத் தராமல், கொச்சிக்கு மெட்ரோ திட்டத்தைக் கொடுத்துள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்துக்கும் மத்திய அரசு பணம் தரவில்லை என்றாா்.
வானதி சீனிவாசன்: அமைச்சா் அழகான பதிலைக் கூறினாா். தமிழகத்துக்குத்தான் அதிகமான பொலிவுறு நகரம் திட்டம் மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு தளவாட தொழில் வழித்தடம் தமிழகத்துக்குத்தான் கொடுக்கப்பட்டது. குஜராத், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. அதனால், பிரதமா் மோடிக்கு பாஜக ஆளும் மாநிலம், ஆளாத மாநிலம் என்கிற பாகுபாடு இல்லை என்றாா் அவா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...