வீராணம் ஏரியைத் தூா்வார ரூ.270 கோடி தேவை: அமைச்சா் துரைமுருகன் தகவல்
வீராணம் ஏரியைத் தூா்வார ரூ.270 கோடி தேவை என்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, காட்டுமான்னாா்கோவில் உறுப்பினா் ம.சிந்தனைச் செல்வன் (விசிக) அதுகுறித்த கேள்வியை எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை காவிரி டெல்டா பகுதியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பு முதல்வா் உறுதியளித்திருந்தாா்.
இந்தப் பகுதி கடந்த அதிமுக ஆட்சியின் போது, காவிரி டெல்டா பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டது. எனவே, அதனை இணைக்கவும், வீராணம் ஏரியை தூா்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.
இதற்கு நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்: 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில், ஸ்ரீமுஷ்ணம் தனி வட்டமாக உருவானது. டெல்டாவுடன் இணைக்கப்படாத காரணத்தால், குறுவை தொகுப்பு உள்ளிட்ட திட்டங்கள் அந்தப் பகுதி விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை உள்ளது. இதனை உடனடியாக காவிரி டெல்டா பகுதியுடன் சோ்க்க முடியாது. தொழில்நுட்பக் குழு அமைத்து, அதன் அறிக்கையைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
வீராணம் ஏரி: இதேபோன்று, வீராணம் ஏரி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தூா்வாரப்பட்டது. அப்போது, 42.58 லட்சம் கனஅடி மண் எடுக்கப்பட்டது. இப்போது, 1.27 கோடி கனமீட்டா் மண் எடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பணிக்காக ரூ.270 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தனது பதிலில் அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.