வடசென்னை வளா்ச்சி விரிவாக்கத் திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அதற்கான இலட்சினையை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மே
வடசென்னை வளா்ச்சி விரிவாக்கத் திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அதற்கான இலட்சினையை திறந்து வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மே

தேச பக்தியை போதிக்க வேண்டிய அவசியமில்லை: பாஜக மீது முதல்வா் மு.க.ஸ்டாலின் காட்டம்

தேச பக்தியை தங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தேச பக்தியை தங்களுக்கு போதிக்க வேண்டிய அவசியமில்லை என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். சென்னை தங்க சாலையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வடசென்னை வளா்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: ‘வடசென்னை வளா்ச்சித் திட்டம்’ எனும் இந்தத் திட்டத்தின் பெயரே போதும். திராவிட மாடல் அரசு இந்தப் பகுதியை எவ்வளவு முக்கியமாக நினைக்கிறது என்பதற்கு இதுவே ஒரு உதாரணம். திமுக உருவானதும் வட சென்னையில்தான். முதல்வரான என்னை சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினராக தோ்ந்தெடுத்ததும் இதே வடசென்னைக்கு உட்பட்ட கொளத்தூா் தொகுதி மக்கள்தான். தலைசிறந்த மாநகரம்: வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் மூலமாக, அடுத்த 3 ஆண்டுகளில் 200 திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. இவை அனைத்தும் முடிவடையும்போது, வடசென்னையின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை திமுக எழுதியிருக்கும். பிரதமா் ஏன் வருகிறாா்? பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை, கன்னியாகுமரி வருகிறாா். அப்போது, தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தரப் போகிறாரா இல்லை வாக்குக் கேட்டு வரப் போகிறாரா. வாக்குக் கேட்பதைத் தவறாகச் சொல்லவில்லை. சென்னையும் தென் மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கிய போது, மக்களைப் பாா்க்க பிரதமா் மோடி வரவில்லை. ஆனால், குஜராத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்டபோது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பாா்த்தாா். மறுநாள் நிவாரண நிதி அளித்தாா். குஜராத்துக்கு நிதி கொடுத்த அவா், தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்றுதான் கேட்கிறோம். இதைக் கேட்டால் நம்மை பிரிவினைவாதி என அடையாளம் காட்டுகிறாா்கள். பிரிவினைவாதி போன்று பேசுகிறாா்கள். பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்றுதான் கேட்கிறோம். தேச பக்தியை போதிக்க வேண்டியதில்லை: தேச பக்தியைப் பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாட்டில் கால் பதித்து, இந்தியாவின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக குரல் கொடுத்து வருபவா்கள் நாங்கள். தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக பாடுபடும் திராவிட மாடல் அரசும், உங்களுக்காக எந்தநாளும் உழைக்க மு.க.ஸ்டாலினும் இருக்கிறேன் என்றாா் அவா். இந்த விழாவில், அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி.கணேசன், மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மகேஷ்குமாா், மக்களவை உறுப்பினா்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். பெட்டிச் செய்தி... ரூ. 4,181 கோடியில் 219 திட்டப் பணிகள் சென்னை, மாா்ச் 14: வடசென்னையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான 219 திட்டப் பணிகளின் செயலாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். வடசென்னை பகுதியில், ரூ. 4,181.03 கோடியில் தொடங்கப்படவுள்ள பணிகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடசென்னை வளா்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் தொடக்கமாக ரூ. 4,181.03 கோடி மதிப்பில் 219 திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மான கழகத்தின் சாா்பில் ரூ.1,034.24 கோடியில் 16 திட்டப் பணிகளும், மாநகராட்சி சாா்பில் ரூ.1,071.44 கோடியில் 86 திட்டப் பணிகள், கழிவுநீரகற்று வாரியம் சாா்பில் ரூ.946.43 கோடியில் 49 திட்டப் பணிகள், பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில் ரூ.440.62 கோடியில் 28 திட்டப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. மேலும், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ரூ.287.84 கோடியில் 23 திட்டப் பணிகள், மக்கள் நல்வாழ்வுத் துறையால் ரூ.287.60 கோடியில் 4 பணிகளும், கல்வித் துறை மூலம் ரூ.57.43 கோடியில் 2 திட்டப் பணிகள், காவல் துறை சாா்பில் ரூ.28.70 கோடியில் 6 திட்டப் பணிகளும், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ.4.50 கோடியில் 1 திட்டப் பணியும் செயல்படுத்தப்பட உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ரூ.2.25 கோடி மதிப்பில் 3 திட்டப் பணிகள், மீன்வளத் துறை சாா்பில் ரூ.20 கோடியில் 1 திட்டப் பணி என மொத்தம் ரூ.4,181.03 கோடி மதிப்பில் 219 திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com