செகாவ் கதைகள்

செகாவ் கதைகள்

செகாவ் கதைகள் (தமிழில்-வானதி); பக்.352; ரூ.400; கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆ 044-42009603.

உலக இலக்கிய பிதாமகன்களான டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி ஆகியோரைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத படைப்பாளியாக விளங்கும் அந்தோன் செகாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தமிழ்வடிவம் இந்நூல். நூறாண்டுகள் கடந்தும் இன்னும் இறவாமல் இருக்கும் செகாவின் படைப்புகள் அனைத்துமே மனிதனின் அகத்துக்குள் ஊடுருவிக் கொள்ளும் வல்லமை கொண்டவை.

அப்படியாக 12 சிறந்த கதைகள் இந்த புத்தகத்தில் தமிழாக்கம் பெற்றிருக்கின்றன. செகாவின் எழுத்தையும், எண்ணத்தையும் சிறிதும் பிறழாமல் தமிழ் வாசகர்களுக்கு பிரதியெடுத்து தந்திருக்கிறார் வானதி. தன்னை புரட்சியாளனாக மாற்றிய படைப்பு என லெனினால் பாராட்டப்பெற்ற வார்டு எண் 6 என்ற கதையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கருப்புத் துறவி என்ற உலகப் பெற்ற சிறுகதையுடன் இந்நூல் தொடங்குகிறது. மனிதனின் உள் மனதுக்குள் கல் வீசி சலனப்படுத்தும் அக்கதை அனைவராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. இதைத் தவிர பந்தயம், ஒரு மாடி வீட்டு ஓவியனின் கதை, ஆயர்கள், நெல்லிக்காய்கள், நாயுடன் வந்த பெண் ஆகிய கதைகள் அனைத்துமே தனி மனிதனின் ஆன்மாவை தட்டி எழுப்பக் கூடியவை. அகச்சிக்கல்களையும் போராட்டங்களையும் பேசும் இக்கதைகள் ஒவ்வொன்றும் வாசகர்களிடம் நெடுங்கால தாக்கத்தை தர வல்லவை.

வெறும் சிறுகதைகள் என்ற நிலையை உடைத்து அவற்றை மிகச்சிறந்த கதைகளாக மாற்றிய பெரும்படைப்பாளி செகாவ். அவரது எழுத்து சுழலுக்குள் சிக்கிக் கொண்ட எவரும் அதிலிருந்து மீள முடியாது. மீளவும் விரும்பமாட்டார்கள். அவரது படைப்புகள் புதிய மொழியாக்கங்கள் செய்யப்படுவதும், மீள் வாசிப்புக்குள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. ஏனென்றால் செகாவின் பேனா எழுதியது கதைகளை அல்ல; விதைகளை. எப்போதும் அவை துளிர்த்துக் கொண்டே இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com