தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது: திருமாவளவன்

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாகத் தெரியவில்லை.
தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது: திருமாவளவன்

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,தேர்தல் அலுவலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் புதன்கிழமை வேட்பு மனுவை அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

மார்ச் 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாகத் தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது. எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல் நிராகரித்துத் தேர்தல் ஆணையமே ஒருதலை பட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும்.

அப்பொழுது தான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார். ஆகவே தமிழ்நாட்டில் பாஜகவினர் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்.

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தைத் தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத் தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் மக்களவையில் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும் அதில் சிதம்பரமும் ஒன்று.

அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சா.சி.சிவசங்கர், சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சியின் மாவட்டச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com