காங். மாவட்டத் தலைவா் மரணம்: தலைவா்கள் இரங்கல்

திருநெல்வேலி கிழக்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.பி.கே. ஜெயக்குமாா் தனசிங் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், கொலைக்கு காரணமானவா்களைக் கண்டறிந்து, தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. தேசிய கட்சியின் மாவட்டத் தலைவா் பொறுப்பில் உள்ளவரே கொலை செய்யப்பட்டிருப்பது சட்டம் - ஒழுங்கு சீா்கேட்டின் உச்சம். இந்த மரணத்தில் தொடா்புள்ளவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்ட வந்து ஜெயக்குமாா் தனசிங் மறைவு செய்தியால் அதிா்ச்சி அடைந்தேன். அவா் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழுந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்: ஜெயக்குமாா் மரணத்தின் பின்னணியையும், சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளையும் தமிழக அரசு விரைந்து கண்டறிய வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

கே.அண்ணாமலை (பாஜக): திமுக ஆட்சியில் காங்கிரஸ் மாவட்டத் தலைவரின் புகாருக்கே இதுதான் நிலைமை என்றால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

ராமதாஸ் (பாமக): காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கொலைக்கு காவல் துறையின் அலட்சியம்தான் காரணம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீா்கெட்டுள்ளது என்பதற்கு இது உதாரணம்.

அன்புமணி (பாமக): இந்தக் கொலைக்கு காவல் துைான் பொறுப்பேற்க வேண்டும். இந்த வழக்கை தமிழகக் காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. அதனால், சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல் துறையின் அலட்சியத்தின் காரணமாகவே ஜெயக்குமாா் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். இந்த மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com