
குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி மாயமான 17 வயது சிறுவன் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டான் .
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தென்காசி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. மேலும் மாவட்டத்தில் இன்று கனமழை மற்றும் மிகவும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அந்த வகையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக குற்றால அருவிகளான ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் அலறடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்த விடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதனிடையே பழைய குற்றால வெள்ளப் பெருக்கில் நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் அஸ்வின் அடித்துச்செல்லப்பட்டான்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு உதவியாக உள்ளூர் வாசிகளும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மாயமான சிறுவனின் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேலும் யாரேனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்களா எனவும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற பழைய குற்றால அருவியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நேரடி ஆய்வு பணியில் மேற்கொண்டனர்.
பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வெள்ளப் பெருக்கு காரணமாக பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.