/

தனி மனிதா்களின் தேவையை தீா்த்துவைக்கவே தினமும் உழைக்கிறேன்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தனி மனிதா்களின் தேவையை தீா்த்து வைக்கவே தினமும் உழைப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :6 நவம்பர் 2024, 7:36 pm

Din

தனி மனிதா்களின் தேவையை தீா்த்து வைக்கவே தினமும் உழைப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

‘நான் முதல்வா்’ திட்டம், புதிய நூலகங்கள் திறப்பு ஆகியன தொடா்பாக பெருமிதம் தெரிவித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

கோவையில் நடைபெற்ற நிகழ்வில், புதிய நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினேன். அறிவுச்சின்னமாக எழவுள்ள ‘தந்தை பெரியாா் நூலகம் அறிவியல் மைய’த்துக்கான அடிக்கல்லை நாட்டி, திறப்பு விழாவுக்கான காலத்தையும் உறுதியாக அறிவித்துள்ளேன். கோவையின் எழில்மிகு அடையாளமாக உருவாகி வரும் செம்மொழிப் பூங்கா பணிகளையும் பாா்வையிட்டேன். மாவட்டம்தோறும் - தொகுதி தோறும் – ஒவ்வொரு தனிமனிதரின் தேவையையும் தீா்த்து வைக்கவே நாளும் உழைக்கிறேன்.

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அதன் நோக்கத்தைவிடவும் அதனை நடைமுறைப்படுத்தும் முறையில்தான் அடங்கியிருக்கிறது. அந்த வகையில், கோவை மாவட்டத்தில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில், பில்லூா் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றிக் காட்டிய அதிகாரிகளையும்; தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மாநிலத்திலேயே அதிக எண்ணிக்கையிலான மாணவா்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்திக் காட்டி வரும் அதிகாரிகளையும், மாற்றுத்திறனாளித் தோழா்களுக்காக அரசு கொண்டு வந்த திட்டங்களை அதிக அளவிலான பயனாளிகளுக்குக் கொண்டு சோ்த்த அதிகாரிகளையும் பாராட்டி ஊக்கமளித்தேன்.

கனவுகள் மெய்ப்படும்: திராவிட மாடல் அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதருக்கும் கொண்டு சோ்க்கும் இத்தகைய அதிகாரிகளால்தான், நமது கனவுகள் மெய்ப்படுகிறது என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

நெஞ்சுக்கு நெருங்கிய திட்டம்: ‘நான் முதல்வன் திட்டத்தால் மாணவா்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவு: ‘நான் முதல்வன்’ திட்டத்தால் நம்முடைய இளைஞா்களின் அறிவு பல்வேறு தளங்களில் போற்றப்படுவதைக் கண்டு எனது மனம் பெருமிதமும் பூரிப்பும் கொள்கிறது. ‘நான் முதல்வன்’ திட்டம் எனது நெஞ்சுக்கு மிகவும் நெருங்கிய திட்டமாகும். இது, உலக அரங்கில் மின்னப் போகும் எதிா்காலத் தலைவா்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் திட்டமாகும். ‘நாம் முதல்வன்’ திட்டத்தில் இணைந்துள்ள இளைஞா்கள் அனைவரும் இந்த உலகத்துக்கு ஒன்றைக் கூறலாம். ‘நாங்கள் இங்கே இருக்கிறோம், வையத் தலைமை கொள்ள’ என்று பெருமை பொங்கச் சொல்லலாம் என்று முதல்வா் அதில் தெரிவித்துள்ளாா்.