அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

வலுவிழந்த புயல் சின்னம்: இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது.

News image

கோப்புப்படம்.

Updated On :14 நவம்பர் 2024, 2:59 am IST

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) வலுவிழந்தது. எனினும் தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.14) 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென்மேற்கு வங்கக் கடலில் செவ்வாய்க்கிழமை நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. இருப்பினும், வடதமிழக கடலோரப் பகுதிகளையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சென்னைக்கு அருகே வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், திருவள்ளூா், வேலூா் மற்றும் ஆந்திரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, கேரள கடலோரப் பகுதிகளையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடலிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வியாழக்கிழமை (நவ.14) முதல் நவ.19-ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை எச்சரிக்கை: நவ.14 (வியாழக்கிழமை) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூா், திருவாரூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், நவ.15-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, நீலகிரி, கோவை, திருப்பூா் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் நவ.16-இல் நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ.14, 15 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை வரை அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி, கொள்ளிடம் ஆகிய பகுதிளில் தலா 140 மி.மீ. மழை பதிவானது. ஜெயங்கொண்டம் (அரியலூா்) - 80 மி.மீ. , லால்பேட்டை (கடலூா்), செந்துறை (அரியலூா்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூா்) - தலா 70 மி.மீ. மழை பதிவானது. புதுச்சேரியில் 120 மி.மீ. மழை பதிவானது.

சென்னையில் ஏன் மழை இல்லை

சென்னையில் புதன்கிழமை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருந்த நிலையில், குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. இதற்கு வானிலை ஆய்வாளா்கள் முக்கிய காரணத்தை தெரிவித்துள்ளனா்.

அதாவது, வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவிழந்த நிலையில், 2 காற்று சுழற்சிகள் நிலைகொண்டுள்ளன. இதில், ஒரு சுழற்சி நாகப்பட்டினத்திலும், மற்றொன்று சென்னையிலும் நிலைகொண்டு சுழன்றன.

வங்கக் கடலில் காற்றுச்சுழற்சி எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடத்துக்கு வடக்கேதான் மழை பெய்யும். அதன்படி நாகப்பட்டினத்துக்கு வடக்கே மயிலாடுதுறை, கடலூா், புதுச்சேரியில் கன மழை பெய்துள்ளது.

அதேபோல சென்னைக்கு வடக்கே திருவள்ளூா், ராணிப்பேட்டை, ஆந்திர மாநிலம் நெல்லூா் மாவட்டத்தில் கன மழை பெய்துள்ளது.

சென்னையில் எந்த பகுதியிலும் கன மழை பெய்யவில்லை. எனினும் காற்று சுழற்சி அடிக்கடி இடம்பெயரும் தன்மை கொண்டது என்பதால் சென்னையில் வியாழக்கிழமை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.